இன்று நிறைவுற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் திரித்துவக் கல்லூரி மற்றும் தர்மசோக கல்லூரி அணிகள் வெற்றியை சுவீரித்துக் கொண்டதுடன், புனித சில்வெஸ்டர் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, ரிச்மண்ட் கல்லூரி மற்றும் மலியதேவ கல்லூரி அணிகள் முதல் இன்னிங்ஸ் வெற்றிகளை பெற்றுக் கொண்டன.

புனித தோமஸ் கல்லூரி எதிர் புனித அலோசியஸ் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான போட்டியொன்றில் புனித தோமஸ் கல்லூரியும் புனித அலோசியஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித அலோசியஸ் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 113 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்று களமிறங்கியது.

அபாரமாக பந்து வீசிய பவித் ரத்நாயக்க வெறும் 17 ஓட்டங்களை மாத்திரமே வழங்கி 6 விக்கெட்டுகள் வீழ்த்த, புனித அலோசியஸ் கல்லூரி 124 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிந்து சஞ்சன அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்படி 38 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட புனித தோமஸ் கல்லூரி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. போட்டியை சமநிலையில் முடித்து முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மந்தமான கதியில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி 51 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இன்றைய நாள் ஆட்டம் நிறைவடைய சிறிது நேரமே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய புனித அலோசியஸ் கல்லூரி அணி 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி 78.1 ஓவர்களில் 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. குணவர்தன 45 ஓட்டங்கள் குவித்தார். புனித அலோசியஸ் கல்லூரி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஹரீன் வீரசிங்க 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

புனித தோமஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 162 (78.1) – குணவர்தன 45, ஹரீன் வீரசிங்க 5/43, ரவிந்து சஞ்சன 3/26

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 124 (63.5) – ரவிந்து சஞ்சன 40, பவித் ரத்நாயக்க 6/17

புனித தோமஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 100/8d (51.3) – ஹரீன் வீரசிங்க 4/31

புனித அலோசியஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 37/2 (13)

முடிவு: போட்டி  சமநிலையில் முடிவடைந்தது. புனித தோமஸ் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


திரித்துவக் கல்லூரி எதிர் புனித மேரிஸ் கல்லூரி

இத்தொடரின் குழு ‘A’ இற்கான போட்டியொன்றில் திரித்துவக் கல்லூரியும் புனித மேரிஸ் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித மேரிஸ் கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற மேலும் 246 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

எனினும், விமுக்தி நெதுமால் (4/16) மற்றும் ஹசித போயகொட (3/12) ஆகியோர் பந்துவீச்சில் அசத்த, புனித மேரிஸ் கல்லூரி 90 ஓட்டங்களுக்கே சுருண்டது. சஞ்சய ரஞ்சித் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 218 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட திரித்துவக் கல்லூரி எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய புனித மேரிஸ் கல்லூரி 270 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் ஷனோகீத் சண்முகநாதன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 7 ஓவர்களில் 53 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திரித்துவக் கல்லூரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை சுவீகரித்தனர். ஷனோகீத் 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

முன்னர் முதல் நாளின் போது, அணித்தலைவர் ஷனோகீத் சண்முகநாதன் ஆட்டமிழக்காது 151 ஓட்டங்கள் விளாச, திரித்துவக் கல்லூரி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய களன டி சொய்சா ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் ஹசித போயகொட 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 308/2d (64.1) – ஷனோகீத் சண்முகநாதன் 151*, களன டி சொய்சா 67*, ஹசித போயகொட 46

புனித மேரிஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 90 (35.3) – சஞ்சய் ரஞ்சித் 21, விமுக்தி நெதுமால் 4/16,  ஹசித போயகொட 3/12, திசரு டில்ஷான் 2/18

புனித மேரிஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 270 (78) – ஷனோகீத் சண்முகநாதன் 4/47

திரித்துவக் கல்லூரி  (இரண்டாவது இன்னிங்ஸ்) – 55/2 (4.2) – ஷனோகீத் சண்முகநாதன் 36

முடிவு: திரித்துவக் கல்லூரி 8 விக்கெட்டுகளினால் வெற்றி.


நாலந்த கல்லூரி எதிர் ரிச்மண்ட் கல்லூரி

குழு ‘A’ இற்கான மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரியை எதிர்த்து ரிச்மண்ட் கல்லூரி போட்டியிட்டது. முதல் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை பெற்றிருந்த ரிச்மண்ட் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 79 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

ரவிஷ்கா விஜேசிறி 50 ஓட்டங்களையும் சமிகார ஹேவகே 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, ரிச்மண்ட் கல்லூரி 191 ஓட்டங்களைக் குவித்து 1 ஓட்டத்தினால் முன்னிலை பெற்றுக் கொண்டது. நாலந்த கல்லூரி சார்பாக அசேல குலதுங்க 3 விக்கெட்டுகளையும் உமேஷ் டில்ஷான் மற்றும் சுரங்க விஜேவர்தன தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

தனது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய நாலந்த கல்லூரி 51.5 ஓவர்களில் 187 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சுரங்க விஜேவர்தன 82 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பந்து வீச்சில் கவிஷ்க விஜேசிறி 4 விக்கெட்டுகளையும் கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.

சொற்ப ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில் 187 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி, போட்டி நிறைவுறும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தது. அதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய நாலந்த கல்லூரி 54.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. கசுன் சந்தருவன் அதிகபட்சமாக 45 ஓட்டங்கள் குவித்தார். பந்து வீச்சில் கவிஷ்க விஜேசிறி மற்றும் தவீஷ அபிஷேக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 190 (54.3) – கசுன் சந்தருவன் 45, டில்ஹார பொல்கம்பொல 27, கவிஷ்க விஜேசிறி 2/18, தவீஷ அபிஷேக் 2/33

ரிச்மண்ட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 112/5 (38) – சமிகார ஹேவகே 35, சுரங்க விஜேவர்தன 2/21

நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 187 (51.5) – சுரங்க விஜேவர்தன 82, கசுன் சந்தருவன் 28, கவிஷ்க விஜேசிறி 4/46, கமிந்து மெண்டிஸ் 3/29

ரிச்மண்ட் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 94/4 (14.5)

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. நாலந்த கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


மொரட்டுவ மகா வித்தியாலயம் எதிர் தர்மாசோக கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘C’ இற்கான மற்றுமொரு போட்டியில் மொரட்டுவ மகா வித்தியாலயமும் தர்மாசோக கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றிருந்த தர்மாசோக கல்லூரி, இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 353 ஓட்டங்களைக் குவித்தது.

அற்புதமாக துடுப்பெடுத்தாடிய ரவிந்து ரொஷாந்த 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் நிர்மால் விஜேசிங்க 4 விக்கெட்டுகளையும் ஜனித்த செவ்மித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

230 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மொரட்டுவ மகா வித்தியாலயம் 220 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனித்து போராடிய மதுஷ்கா பெர்னாண்டோ 76 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார். தர்மாசோக கல்லூரி சார்பாக உஷான் நிமந்த மற்றும் நிமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். இதன்படி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களினால் தர்மாசோக கல்லூரி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 123 (33.3) – மதுஷ்க பெர்னாண்டோ 55, கவிந்து நதீஷான் 14/3

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 353 (88) – ரவிந்து ரொஷாந்த 147, தினுக டில்ஷான் 34, லொஹான் டி சொய்சா 29*, நிர்மால் விஜயசிங்க 4/104, ஜனித்த செவ்மித் 3/81

மொரட்டுவ மகா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 220 (66.2)- மதுஷ்கா பெர்னாண்டோ 76, ஜீவந்த பெர்னாண்டோ 34, நிமேஷ் மெண்டிஸ் 3/52, உஷான் நிமந்த 3/64

முடிவு: தர்மாசோக கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களினால் வெற்றி.


புனித சில்வெஸ்டர் கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி

முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ஓட்டங்களை பெற்றிருந்த தர்மராஜ கல்லூரி, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டுமாயின் மேலும் 239 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

நடுவரிசை மற்றும் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், தர்மராஜ கல்லூரி 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. துலாஜ் பண்டார (67) மற்றும் சச்சிந்த சேனநாயக்க (64) அரைச்சதம் கடந்தனர். பந்து வீச்சில் ஜினோத் யசிந்த 4 விக்கெட்டுகளையும் மனுஜ பெரேரா மற்றும் சுசித் டி சொய்சா தலா 3 விக்கெட்டுகள் வீதமும் பெற்றுக் கொண்டனர்.

இரண்டாவது இன்னிங்சிற்காக ஆடுகளம் பிரவேசித்த புனித சில்வெஸ்டர் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. நிமந்த ஹேரத் மற்றும் கிஹான் விதாரண 2 விக்கெட்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர். அதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 281/9d (76.3) – அவிந்து ஹேரத் 81, மனுஜ பெரேரா 72, மஞ்சித் ராஜபக்ஷ 41, ருக்மல் திஸ்ஸாநாயக 4/75, தேஷான் குணசேகர 2/21

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 241 (77.1) – துலாஜ் பண்டார 67, சச்சிந்த சேனநாயக்க 64, கவிந்த திலகரத்ன 39, ஜினோத் யசிந்த 4/80, மனுஜ பெரேரா 3/33, சுசித் டி சொய்சா 3/60

புனித சில்வெஸ்டர் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 70/5 (38.1) – கவிந்து முனவீர 28, நிமந்த ஹேரத் 2/16, கிஹான் விதாரண 2/06

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித சில்வெஸ்டர் கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


மலியதேவ கல்லூரி எதிர் புனித சேர்வேஷஸ் கல்லூரி

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டியின் முதல் நாள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித சேர்வேஷஸ் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 191 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

முதித ஹஷான் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் திலான் பிரஷான் 43 ஓட்டங்களையும் குவிக்க புனித சேர்வேஷஸ் கல்லூரி 208 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மலியதேவ கல்லூரி சார்பாக சஜீவன் பிரியதர்ஷன மற்றும் தமித சில்வா 3 விக்கெட்டுகள் வீதம் சாய்த்தனர்.

போட்டி நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில் களமிறங்கிய மலியதேவ கல்லூரி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 5 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 254 (73.4) – சுபுன் சுமணரத்ன 49, சுலங்க ஹெட்டியாராச்சி 37*, பவித்ர லியனகே 36, சஷிக துல்ஷான் 6/73

புனித சேர்வேஷஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 208 (61.4) – முதித ஹஷான் 80*, திலான் பிரஷான் 43, சுபுன் கவிந்த 26, சஜீவன் பிரியதர்ஷன 3/47, தமித சில்வா 3/57

மலியதேவ கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 5/0 (1)

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மலியதேவ கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.