சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட குழு A இற்கான போட்டியில் 87 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

கார்டிப் சோப்ஹியா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான 6ஆவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அவுஸ்திரலிய அணியுடனான ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறக்கூடிய சந்தர்ப்பம் இருந்ததால் இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்யும் எதிர்பார்ப்பில் களமிறங்கியது.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 37 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் ஜேசன் ரோய், அடம் மில்னேயின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து துடுப்பாடக் களமிறங்கிய ஜோ ரூட், அலெக்ஸ்  ஹேல்சுடன் இணைந்து நிதானமாக துடுப்பாடி இரண்டாம் விக்கெட்டுக்காக 81 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட நிலையில், மீண்டும் அடம் மில்னேயின் அதிரடிப் பந்து வீச்சில் அலெக்ஸ் ஹேல்ஸ் 56 ஓட்டங்களுடன் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் வெறும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் வந்த சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்டுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

[rev_slider ct17-dsccricket]

இந்நிலையில், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 188 ஆக இருந்த போது ஜோ ரூட் 64 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

அதிரடியாக துடுப்பாடிய ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களைப் பதிவு செய்த அதேவேளை இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களுக்கு மேல் குவிக்க பங்களிப்பு செய்தார். எனினும், நியூசிலாந்து அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 310 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் அடம் மில்னே மற்றும் கோரி அண்டர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டிம் சௌத்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே கசப்பாக இருந்தது. ஜாக் போலினால் வீசப்பட்ட முதல் பந்திலேயே லூக் ரொன்கி நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். எனினும் அவரை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சுடன், மார்டின் கப்டில் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக 62 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினார்.

பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் மார்டின் கப்டில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரொஸ் டெய்லர் மூன்றாம் விக்கெட்டுக்காக அணித் தலைவர் வில்லியம்சுடன் இணைந்து 95 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார்.

எனினும், இவ்விருவர்களினதும் ஆட்டமிழப்பின் பின்னர் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றமையினால் நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களைப் பெற்று 87 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.  

சம்பியன்ஸ் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொள்ளும் குழு B இற்கான போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து – 310 (49.3) – ஜோ ரூட் 64, அலெக்ஸ் ஹேல்ஸ் 56, இயன் மோர்கன் 13, பென் ஸ்டோக்ஸ் 48, ஜோஸ் பட்லர் 61*, டிம் சௌத்தி 44/2, அடம் மில்னே 79/3, கோரே அண்டர்சன் 55/3  

நியூசீலாந்து – 223 (44.3) – கேன் வில்லியம்சன் 87, ரொஸ் டெய்லர் 39, மார்டின் கப்டில் 27, லியம் பிளாங்கெட் 55/4, ஜேக் போல் 31/2, ஆதில் ரஷிட் 47/2, மார்க் வூட் 32/1

முடிவு – இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி.