முதல் இன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்து லும்பினி கல்லூரி

284
U19 Schools Roundup - 25th of Oct

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் அநுராதபுரம் மகா வித்தியாலயத்துடனான போட்டியில் லும்பினி கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது. அதேவேளை, மஹாநாம கல்லூரி மற்றும் புனித சில்வெஸ்டர் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி மழையின் காரணமாக சமநிலையில் நிறைவடைந்தது.

லும்பினி கல்லூரி எதிர் அநுராதபுரம் மகா வித்தியாலயம்

முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பேதுமின்றி 17 ஓட்டங்களை பெற்றிருந்த அநுராதபுரம் மகா வித்தியாலயம், முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக மேலும் 170 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது.

எனினும், அசத்தலாக பந்து வீசிய தனுக தாபரே 6 விக்கெட்டுக்கள் வீழ்த்த, அநுராதபுரம் மகா வித்தியாலயம் 142 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணி சார்பில் மலிந்த மூர்த்தி அதிகபட்சமாக 24 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

44 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட லும்பினி கல்லூரி இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. துடுப்பாட்ட வீரர்கள் துரிதமாக ஓட்டங்கள் குவிக்க, லும்பினி கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. துடுப்பாட்டத்தில் ரவிந்து சஞ்சீவ 48 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பந்து வீச்சில் சிதும் பண்டார 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்படி 184 என்ற இலக்கை நோக்கி ஆடுகளம் பிரவேசித்த அநுராதபுரம் மகா வித்தியாலயம், இன்றைய நாள் ஆட்டம் நிறைவடையும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. தனஞ்சய தம்மிட அதிகபட்சமாக 42 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். லும்பினி கல்லூரி சார்பாக கனிஷ்க மதுவந்த 4 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார்.

முன்னர், முதலில் துடுப்பெடுத்தாடிய லும்பினி கல்லூரி 47.4 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்து வீசிய மதுரங்க சந்திரரத்ன 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லும்பினி கல்லூரி சார்பில் வினு ஹேமால் அதிகபட்சமாக 33 ஓட்டங்கள் குவித்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 186 (47.4) – வினு ஹேமால் 33, ரவிந்து சஞ்சீவ 31, மதுரங்க சந்திரரத்ன 5/50, சிதும் பண்டார 2/30

அநுராதபுரம் மகா வித்தியாலயம் (முதல் இன்னிங்ஸ்) – 142 (49.2) – மலிந்த மூர்த்தி 24*, தனுக தாபரே 6/34

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 139/8d – (23) – ரவிந்து சஞ்சீவ 48, சிதும் பண்டார 5/42, மதுரங்க சந்திரரத்ன 3/65

அநுராதபுரம் மகா வித்தியாலயம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 108/6 (36.5) – தனஞ்சய தம்மிட 42,கனிஷ்க மதுவந்த 4/40, தனுக தாபரே 2/47

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. லும்பினி கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி.


மஹாநாம கல்லூரி எதிர் புனித சில்வெஸ்டர் கல்லூரி

இன்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒரு ஓவரும் வீசப்படாத நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. நேற்றைய தினமும் மழையின் காரணமாக 28 ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புனித சில்வெஸ்டர் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. பந்து வீச்சில் அசத்திய நிதுக வெலிகல (3/25) மற்றும் மஹேல டி சில்வா (2/13) ஆகியோர் 5 விக்கெட்டுகளை பதம் பார்த்தனர். இதன்படி, புனித சில்வெஸ்டர் கல்லூரி 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தனித்து போராடிய அணித்தலைவர் மனுஜ பெரேரா ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி – 69/5 (28) – மனுஜ பெரேரா 42*, நிதுக வெலிகல 3/25, மஹேல டி சில்வா 2/13

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


புனித சேர்வேஷஸ் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

சிங்கர்கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் புனித சேர்வேஷஸ் கல்லூரியும் புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய புனித சேர்வேஷஸ் கல்லூரி, எதிரணியின் நிபுன் தனஞ்சய (5/33) மற்றும் ஆகாஷ் நாணயக்காரவின் (4/32) சிறப்பான பந்து வீச்சினால் 116 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் சந்துரு நெத்மின அதிகபட்சமாக 46 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது. துடுப்பாட்டத்திலும் அசத்திய நிபுன் தனஞ்சய ஆட்டமிழக்காது 40 ஓட்டங்கள் பெற்றிருந்தார். புனித சேர்வேஷஸ் கல்லூரி சார்பில் சரித் ஹர்ஷண 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

புனித சேர்வேஷஸ் கல்லூரி – 116 (39.4) – சந்துரு நெத்மின 46, நிபுன் தனஞ்சய 5/33, ஆகாஷ் நாணயக்கார 4/32

புனித ஜோசப் வாஸ் கல்லூரி – 124/6 (46) – நிபுன் தனஞ்சய 40*, சரித் ஹர்ஷண 4/15


நாலந்த கல்லூரி எதிர் தர்மாசோக கல்லூரி

இன்று ஆரம்பித்த மற்றுமொரு போட்டியில் நாலந்த கல்லூரி மற்றும் தர்மாசோக கல்லூரி அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நாலந்த கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய தர்மாசோக கல்லூரி, இன்றைய தினத்திற்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது 5 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஹர்ஷஜித் ருஷான் 52 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். சுஹங்க விஜேவர்தன மற்றும் உமேஷ்க டில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர். மழையின் காரணமாக இன்று 38 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

தர்மாசோக கல்லூரி – 119/5 (38) – ஹர்ஷஜித் ருஷான் 52, சுஹங்க விஜேவர்தன 2/11, உமேஷ்க டில்ஷான் 2/38