தலைவர் பொறுப்பில் இருந்து திடீரென்று விலகிய டோனி

1061
MS Dhoni

தற்போதைய இந்திய அணியின் சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T-20 அணிகளின் தலைவராக உள்ள மஹேந்திர சிங் டோனி, தான் ஒருநாள் மற்றும் T-20 அணிகளின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்து, அணியை மிகப்பெரிய இலக்குகளை அடைய வைத்த இவரது இந்த பதவி விலகளைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஒருநாள் மற்றும் T-20 அணிகளுக்கான புதிய தலைவரைத் தெரிவு செய்யும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் தெரிவுக்குழு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தலைவரும், சிறந்த துடுப்பாட்ட வீரருமான விராட் கோலிக்கே, டோனியின் இடத்தை நிரப்பும் விதத்தில் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் என்று பல தரப்பினராலும் நம்பப்படுகின்றது.

டோனியின் விலகல் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”எம். எஸ். டோனி, தான் சர்வதேச ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் இருந்து விலகுவது குறித்த அறிவிப்பை எமக்கு தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) பிரதம நிறைவேற்று அதிகாரி ராஹுல் ஜொஹ்ரி இது குறித்து கருத்து தெரிவிக்கும்பொழுது, ”டோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி பல இலக்குகளையும் வெற்றிகளையும் எட்டியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் செய்த மிகப் பெரிய பங்களிப்புகளுக்காக கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் சார்பாக நாம் அவருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இணைந்த டோனி, அணியின் தலைவராக இருந்த காலத்தில் இந்திய அணி 2007ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணம், 2011ஆம் அண்டு உலகக் கிண்ணம் (ஒருநாள்) மற்றும் 2013ஆம் அண்டு சம்பியன் கிண்ணம் என்பவற்றைக் கைப்பற்றியது. இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் சபையின் முக்கிய கிண்ணங்கள் மூன்றையும் கைப்பற்றிய ஒரு அணிக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

அதேபோன்று, உலகில் உள்ள அனைத்து அணிகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஒரு அணியாக இந்திய அணி இருந்தமைக்கு டோனியின் வழி நடத்தல் முக்கிய காரணமாக இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தனி நபராகவும் துடுப்பாட்டத்தில் சிறந்த முறையில் அணிக்கு பங்காற்றியுள்ள இவர், 283 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,110 ஓட்டங்களையும், 73 T-20 போட்டிகளில் விளையாடி 1,112 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

அதேபோன்று, விக்கெட் காப்பாளராக இருந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 264 பிடியெடுப்புக்களையும், 91 ஸ்டம்பிங்களையும் செய்துள்ள அவர், T-20 போட்டிகளில் 41 பிடியெடுப்புக்களையும், 22 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.

முன்னர் இந்தியாவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T-20 அணிகளின் தலைவராகக் கடமையாற்றிய டோனி, கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் என்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அது போன்றே, தற்பொழுதும் அவர் ஏனைய இரண்டு வகையான போட்டிகளுக்கான அணியின் தலைவர் பதவியில் இருந்து திடீர் என்று விலகியுள்ளமை இந்திய ரசிகர்கள் மட்டுமன்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

டோனியின் தலைமையில் இந்திய அணியின் ஒருநாள், T-20 முடிவுகள்

போட்டி வெற்றி தோல்வி சமநிலை முடிவற்றது
ஒருநாள் 199 110 74 4 11
T-20 72 41 28 1 2