இந்திய T20i அணியில் மூன்று வீரர்கள் இணைப்பு

55

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20i தொடரில் மொஹமட் ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவையும், தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரையும் இணைத்துக் கொள்ள பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாபிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் முதல் T20i போட்டி புதன்கிழமை (28) திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், T20I தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி,

முதுகு வலி காரணமாக தீபக் ஹூடா, தென்னாப்பிரிக்காவுடனான T20i தொடரிலிருந்து விலகியுள்ளார். தேசிய கிரிக்கெட் அகடமியில் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமாரும் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு உடற்தகுதி தொடர்பான பரிசோதனைகளுக்காகச் சென்றுள்ளார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொஹமட் ஷமி, இன்னும் முழுமையாகக் குணமடையவில்லை. எனவே அவரும் T20i தொடரில் பங்கேற்க மாட்டார்.

இதனால் மொஹமட் ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ்வும், தீபக் ஹூடாவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரும் இந்திய T20I அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அண்மையில் நிறைவடைந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ற சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக சகலதுறை வீரர் ஷபாஸ் அஹமட் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அணியினருடன் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்கா T20I தொடருக்கான இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (உதவி தலைவர்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஷபாஸ் அஹமட்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<