தென்னாபிரிக்க பயிற்சிவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ள மார்க் பௌச்சர்

161

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைமை பயிறுவிப்பாளரான மார்க் பௌச்சர், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடருடன் தனது பதவியிலிருந்து விலக இருப்பதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

திங்கட்கிழமை, லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நிறைவடைந்ததின் பின்னர் பௌச்சர் இந்த அறிவிப்பை தென்னாபிரிக்கா அணிக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 டிசம்பரிலிருந்து தென்னாபிரிக்க அணிக்கு பயிற்சிவிப்பாளராக இருந்த பௌச்சர், இவ்வருட ஜனவரியில் தங்கள் நாட்டில் பலம் பொருந்திய இந்தியா அணியை 2க்கு 1என தொடரில் வெற்றி பெற்றது.

மேலும், பௌச்சர் அவ்வணியை 11 டெஸ்ட் வெற்றிகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அத்தோடு கடந்த வருட T20 உலகக் கிண்ண தொடரில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளோடு அவ்வணியை அரையிறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.

தற்போது ஐசிசியின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா, இவ்வருட T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் குறிக்கோளோடும் இருக்கிறது.

பௌச்சரின் ஒப்பந்தத்தின்படி, அவர் 2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடர் வரை பயிற்றுவிப்பாளராக இருக்கலாம். இந்நிலையில், பௌச்சரின் இவ்வறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவர் போலெட்ஸ்கி மோஸேகி, “நாங்கள் இந்த அறிவிப்பு குறித்து வியப்படைந்தோம். அவர் எங்களிடம், தான் ஏனைய வாய்ப்புகளை அணுகவுள்ளதாக தெரிவித்தார். எனினும் தென்னாபிரிக்கா அணியை T20 உலகக் கிண்ண தொடருக்கு அழைத்து செல்ல அவர் உள்ளார் என்பதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகிறோம். “

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தென்னாபிரிக்கா T20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப் டவுன் அணிக்கு அவர் பயிற்றுவிப்பாளராக வரவும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கபடுகின்றன.  தற்போது தென்னாபிரிக்கா அணியின் கிரிக்கெட் முகாமையாளரான ஏனோச் நிக்வெ புதிய பயிற்சியாளரை தேடும் பணியை ஆரம்பித்துள்ளார்.  தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை எதிர்வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தற்காலிக பயிற்சியாளரை நியமித்து, அதன் பின்னர் முழுநேர பயிற்சியாளரை நியமிக்கலாம் என அங்கிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

மோஸேகி மேலும் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 3 வருடங்களாக தென்னாபிரிக்கா கிரிக்கெட்டுக்கு பௌச்சர் அர்ப்பணித்த நேரம் மற்றும் உழைப்பிற்கு நாம் அவருக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு கடினமான நேரத்தில் சிறந்த பாதையை அமைத்து கொடுத்துள்ளார். அவர் செய்த வேலைகளுக்கு நாம் மிகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அவரது அடுத்த வேலைக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். “

இது குறித்து நிக்வெ கருத்து தெரிவிக்கையில், “அவர் எம்மை விட்டு செல்வது எமக்கு கவலையை அளித்தாலும், அவரது முடிவுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அவர் ஒரு தென்னாபிரிக்க ஜாம்பவான். கடந்த 3 வருடங்களாக நாட்டுக்காக மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய விடயங்களை செய்துள்ளார். நாங்கள் அதை பாராட்டுகிறோம்.

தென்னாபிரிக்கா 3 விதமான போட்டிகளிலும் பிரகாசிக்க சிறந்த அடித்தளத்தை அவர் இட்டுள்ளார்.  அதன் முடிவுகளை நாம் அடுத்த மாத T20 உலகக்கிண்ண தொடரில் பார்ப்போம். அவரிடம் நம்பிக்கையுள்ள ஒரு சிறந்த குழாம் உள்ளது . இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வருகின்ற முக்கியமான தொடர்களில் அவர்கள் விளையாடும் விதத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன்.” என கூறினார்.

பௌச்சர் பயிற்சியாளராக நியமனம் ஆகும் போது, பல முரண்பாடுகளை அது ஏற்படுத்தியது. காரணம் விளம்பரப்படுத்தப்படாத பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருத்துகள் வெளியாகின.  அவரின் பயிற்சியாளர் காலப்பகுதியில் இனவெறி சர்ச்சைகள் பல ஏற்பட்டன. கடந்த வருட உலகக் கிண்ண தொடரில், கறுப்பின மக்களுக்காக அனைத்து அணிகளும் போட்டி ஆரம்பிக்க முன்னர் முழங்காலில் நின்று மரியாதையை அளிக்க, தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் அந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் பின்னர் அவர்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்தனர். அதன் பின்னர் விரும்பிய வீரர்கள் எப்படியும் ஆதரவளிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டனர்.  அதன் பின்னர் கிரிக்கெட் சபையின் தலையீட்டால் அனைத்து வீரர்களும் முழங்காலில் நிற்கும் படி கேட்டு கொள்ளப்பட்டனர்.

ஆரம்பத்தில் பௌச்சர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை கிரிக்கெட் சபை எடுத்தாலும், பின்னர் அவை தளர்த்தப்பட்டன.  பௌச்சர் மீது எந்த சர்ச்சைகள் வந்தாலும், அவர் தனது அணிக்கு முழு ஆதரவை அளித்து வந்தார்.

பௌச்சரின் கீழ் தென்னாபிரிக்கா அணி கடந்த வருடம் ஜூன் மாதம் டெஸ்ட் தரவரிசையில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியது.  அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைவிட்ட பின்னர், 2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கு முன்னிலை அணியாக தகுதி பெறும் வாய்ப்புகள் குறைவாக காணப்பட்டாலும், இவ்வருட T20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் முக்கிய அணிகளில் ஒன்றாக தென்னாபிரிக்கா அணி பார்க்கப்படுகிறது.

தென்னாபிரிக்கா அணியின் புதிய பயிற்சியாளர் யார் என அறிவிக்கப்படும் பட்சத்தில், தனக்கு யார் பயிற்சிவிப்பு குழாமில் தேவை என்னும் சலுகையை அந்த புதிய பயிற்சியாளர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<