இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக, தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து 3 வாரங்களுக்கு விலகியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் (09) நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் சதம் அடித்து அசத்திய அவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.
தவானின் சதத்தோடு அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
This clip will only be available in Sri Lanka for viewing up to 3 days from the date of…
குறித்த போட்டியில் துரதிஷ்டவசமாக ஷிகர் தவான் காயத்துக்கு உள்ளானார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் நெதன் கோல்டர் நைல் வீசிய பந்து அவரது இடதுகை பெருவிரலை தாக்கியதால் காயம் ஏற்பட்டது. ஆனால், கைவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஷிகர் தவான் சதமடித்தார்.
எனினும், அவுஸ்திரேலிய அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தவானுக்கு ஓய்வளிக்க அணி முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே, தவானுக்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா களத்தடுப்பில் ஈடுபட்டார்.
குறித்த இப்போட்டியில் இந்தியா அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அதோடு, இந்திய அணி வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஷிகர் தவானுக்கு இன்றைய தினம் (11) ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து காயம் குறித்து கிடைத்த அறிக்கையின் படி, மூன்று வாரங்கள் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவக் குழு அறிவுறுத்தி உள்ளது. இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஷிகர் தவான் முழுமையாக விலகுவார் என நம்பப்படுகின்றது.
நாடு திரும்புகிறார் லசித் மாலிங்க
இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க இன்று (11)…
இதேவேளை, ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பாண்ட் அல்லது அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், நியூசிலாந்துடன் நாளை மறுதினம் (13) நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் தவானுக்குப் பதிலாக தமிழக வீரர்களான சகலதுறை வீரர் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவர் அணிக்குள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும், உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஷிகர் தவான், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<