இலங்கை வீரர்களை விசாரிக்க ஐவரடங்கிய குழு நியமனம்

Sri Lanka Tour of England - 2021

199
 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கென ஐவரடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை  கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. 

இதன்படி, குறித்த மூன்று வீரர்களினதும் தனிமைப்படுத்தல் காலம் 13ஆம் திகதி நிறைவடைந்த பிறகு இந்தக் குழுவின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்ட குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, குணத்திலக்க

இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது.  

இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் உதவித் தலைவர் குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூன்று வீரர்களும் கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த 3 வீரர்களும் நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இதுஇவ்வாறிருக்க, தனிமைப்படுத்தல் காலத்தினைப் பூர்த்தி செய்த பிறகு குறித்த வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கு ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நிதிமன்ற நீதிபதி, மூன்று சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீதியரசர் நிமால் திசாநாயக்க (ஓய்வு நிலை உயர்நீதிமன்ற நீதிபதி), சட்டத்தரணிகளான பண்டுக்க கீர்த்தினந்த, அசேல ரேவக்க மற்றும் உச்சித்த விக்ரமசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) எம். ஆர். டபிள்யூ. டி ஸொய்சா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

எதுஎவ்வாறாயினும், குறித்த வீரர்கள் மூவருக்கும் அபராதத்துடன், ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…