தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் சஹீட் அப்ரிடி

1820
Shahid-Afridi-of-Pakistan-celebrates-his-wicket

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பல திருப்புமுனை வெற்றிகளுக்கு கதாநாயகனாக செயற்பட்ட சகல துறை ஆட்டக்காரர் சஹீத் அப்ரிடி சர்ச்சைகள் மற்றும் சாதனைகள் கொண்ட தனது 21 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக  நேற்று (20) அறிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையினை முடித்திருந்த அப்ரிடி, அதனையடுத்து 2015ஆம் ஆண்டின் ஒரு நாள் உலகக் கிண்ணத்துடன் ஒரு நாள் போட்டிகளுக்கும் பிரியாவிடை கொடுத்தார். எனினும், 2016ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற T-20 சம்பியஷன்சிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை அப்ரிடி தலைமை தாங்கியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு நீதிமன்றத் தடை

அத்தொடரில் பாகிஸ்தான் அணி சாதிக்காத காரணத்தினால் T-20 அணியின்  தலைமைப் பொறுப்பினை விட்டிருந்த அப்ரிடி, அத்தொடரை அடுத்து குறைந்த ஓவர்கள் (T-20) கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையினை தொடர்ந்திருந்தார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியொன்றில், பெஷாவர் ஷல்மி அணிக்காக 28 பந்துகளில் 54 ஓட்டங்களினை அதிரடியாக விளாசிய அப்ரிடி அப்போட்டியின் பின்னர், “நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு எனது இறுதி வணக்கத்தினை தெரிவித்து விட்டேன்“ என்றார்.

அத்துடன், அவர் தனது ரசிகர்களுக்காக பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மேலும் இரு வருடங்கள் விளையாடப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், அதில்தான் தனது கிரிக்கெட் வாழ்விற்கு விடை கொடுப்பதாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இன்னும், தன்னால் முடிந்தளவு தனது தாயகத்திற்குரிய கிரிக்கெட் விளையாட்டினை பொறுப்புணர்ச்சியுடன் விளையாடி முடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தனது ஆரம்ப போட்டிகளில் அதிரடி சிக்ஸர்களை  விளாசி வானவேடிக்கை காட்டிய அப்ரிடி அதற்காகவே, “பூம் பூம்“ என்கிற செல்லப் பெயரால் கிரிக்கெட் இரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

1996இல் தான் விளையாடிய இரண்டாவது ஒரு நாள் போட்டியிலேயே, இலங்கை அணிக்கு எதிராக அப்ரிடி அதிரடி ஆட்டம் மூலம் 37 பந்துகளிற்கு அதிவேக ஒரு நாள் சதத்தினை பெற்றிருந்தார். அதிலிருந்து 18 வருடங்களுக்கு அந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் அரைவாசிப் பகுதியில், சுழல் பந்து வீச்சு மூலம் பந்து வீச்சு துறையிலும் புகுந்த அப்ரிடி, தனது மேம்பட்ட சகலதுறை ஆட்டம் மூலம், 2009ஆம் ஆண்டின் T-20 உலகக் கிண்ணத்தினை பாகிஸ்தான் வெல்வதற்கு முழுப்பங்களிப்பினையும் ஆற்றியிருந்தார்.

2016ஆம் ஆண்டு T-20 சம்பியஷன்சிப் போட்டிகளில் முதற் சுற்றுடன் வெளியேறியிருந்த பாகிஸ்தான் அணியில் இருந்த அப்ரிடி, அதனையடுத்து குறுகிய கால ஓய்வொன்றினை T-20 போட்டிகளிலும் எடுத்துக் கொண்டார்.

பின்னர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான பாகிஸ்தான் அணியின் T-20 தொடரில் ஒரு போட்டியினை தனக்கு பிரியாவிடை போட்டியாக அப்ரிடி மாற்ற நினைத்த போதும், இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாகிஸ்தான் தெரிவாளர்களால் அப்ரிடிக்கு அத்தொடரில் வாய்ப்பு வழங்க முடியவில்லை.

அப்ரிடியின், அதிவேக சதத்தினை 18 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து அணியின் கோரி அன்டர்சன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக (2014ஆம் ஆண்டில்) 36 பந்துகளிற்கு சதம் விளாசி தகர்த்தார்.

எனினும், தென்னாபிரிக்க நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் அதே மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக, 2015இல் 31 பந்துகளில் சதம் விளாசி இருவரின் சாதனையும் இல்லாமல் செய்தார்.

தனது அதிவேக அதிரடி சதத்திற்காகவே, இரசிகர்களினால் மைதானத்திற்கு வந்தால் வானவேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட அப்ரிடி, மைதானத்திற்கு வந்து சிறிது நேரத்திலேயே ஆட்டமிழந்து சென்று பல போட்டிகளில் இரசிகர்களினை ஏமாற்றி இருந்த காரணத்தினால் பிற்காலத்தில் எதிர்பார்ப்பு குறைந்த வீரராக மாறினார்.

கிரிக்கெட் போட்டிகளில் சில விநோத வேலைகளினையும் செய்ததன் காரணமாக, அப்ரிடி போட்டித் தடையினையும் பெற்றிருந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பய்ஸாலபாத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில், தனது பாதங்களின் மூலம் மைதானத்தினை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்ரிடிக்கு, ஒரு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்ததுs.

அத்துடன், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியில் பந்தினை கடித்தமை காணொளியில் பதிவாகிய காரணத்தினால், அப்ரிடிக்கு இரண்டு T-20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அப்ரிடி, அவற்றில் 1,176 ஓட்டங்களினை குவித்துள்ளதோடு, 48 விக்கெட்டுக்களையும் சாய்த்திருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக அப்ரிடி 156 ஓட்டங்களினைப் பெற்றுள்ளார்.

அதேபோன்று, 394 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்திய அப்ரிடி, அதிகபட்சமாக 124 ஓட்டங்களினை குவித்திருப்பதோடு, மொத்தமாக 8,064 ஓட்டங்களினையும், தனது சுழல் மூலம் 395 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

தனது T-20 போட்டி சுய விபரக் கோவையில், 98 போட்டிகளில் விளையாடிய தகுதியினை வைத்திருக்கும் அப்ரிடி, அப்போட்டிகளில் 1,405 ஓட்டங்களுடன் 97  விக்கெட்டுக்களை சாய்த்திருக்கின்றமை அவரது சிறந்த திறமைக்கு சான்றாக உள்ளது.

அப்ரிடியின் இந்த பிரியாவிடை அவருக்கு ஓய்வை அளிக்கும் அதேவேளை, அரவது களப் பிரவேசத்தையும், அவரது அதிரடியையும் எதிர்பார்த்திருக்கும் பல ரசிகர்களுக்கு இது சற்று கவலையே ஏற்படுத்தும்.