பலரதும் எதிர்பார்ப்பில் இருந்த இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2016/17ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக்கின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் பெப்ரவரி 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்தது.

இந்நிலையில் கொழும்பு, மாவட்ட நீதிமன்றத்தினால் பெப்ரவரி 17ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவினால் மறு அறிவித்தல் வரை குறித்த போட்டிகள் அனைத்தும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.       

நடைபெற்று வந்த உள்ளூர் பருவகால போட்டிகளிலிருந்து இலங்கை கிரிக்கெட் சபை தடை செய்திருந்த நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தினால் பதியப்பட்ட வழக்கு ஒன்றினாலேயே மேற்குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் பிரீமியர் லீக்கின் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் T-20 தொடர்களுக்கான ஆரம்ப நிகழ்வு, நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தவிர்ந்த ஏனைய 23 கிரிக்கெட் கழகங்களை சேர்ந்த அணித் தலைவர்கள் மற்றும் வீரர்களை உள்ளடக்கியவாறு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற P.சரவணமுத்து கிண்ணப் போட்டித் தொடரில் செபஸ்தியன் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டம் வென்ற அதேநேரம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருந்தது.  

எனினும், செபஸ்தியன் விளையாட்டுக் கழகமானது பதிவு செய்யாத வீரர்களை உள்வாங்கியிருந்ததாக செய்யப்பட்டிருந்த முறைபாட்டையடுத்து, அக்கழகம் இடைநீக்கம் செய்யப்பட்ட அதேநேரம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 2016/17 ஆம் பருவகால பிரீமியர் லீக் பி பிரிவுக்கான போட்டித் தொடருக்கு தகுதியைப் பெற்றுக்கொண்டது.   

குறித்த விடயங்களில் குழப்பமடைந்திருந்த செபஸ்தியன் அணியினர், தமக்கு வழங்கப்பட்ட முடிவுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றினை பெற்றுக்கொண்டது. குறித்த விடயம் நிலுவையில் உள்ளது.  மேலும், அதனை தொடர்ந்து நடைபெற்ற பி பிரிவு போட்டிகளில் பங்குபற்ற நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தயாராகிய நிலையில், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதன் விளைவாக இரண்டு அணிகளும் குறித்த போட்டிகளில் பங்குபற்ற முடியாத வகையில் போட்டித் தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் சண்டே டைம்ஸ்சுக்கு இதுகுறித்து தெரிவித்திருந்த கருத்தில், இந்த சிக்கலான விவகாரத்துக்கு தீர்வாக, மீண்டுமொரு முறை இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியை நடாத்தி அதில் வெற்றிக்கொள்ளும் அணி பி பிரிவு போட்டிகளுக்கு தகுதி பெறும் என்று அறிவித்தோம்.

எனினும், நீர்கொழும்பு அணி அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், வேறு வழியின்றி இலங்கை கிரிக்கெட் சபையின் போட்டி ஏற்பாட்டாளர் குழு, குறித்த விடயத்துக்கு நீதிமன்றம் சரியான தீர்வினை வழங்கும் வரை நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்தினை இடைநிறுத்தி வைத்துள்ளது என்றார்.  

இந்த போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் தெரிவிக்கப்பட்டமைக்கு அமைய, குறித்த மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் T-20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு ரெனால்ட் கவித் (Renault Kwid) வகை கார் ஒன்றும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்தும் அணிக்கு  நிசான் 16 வகையை சேர்ந்த சீட்டர்உர்வன் வேன் ஒன்றும் பரிசாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.