ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத்தின் நேற்றைய போட்டிகளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை 55 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

நேற்றைய நாளின் 2ஆவது போட்டி இயோன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டெரென் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை மும்பையில் அமைந்துள்ள வென்கடெ மைதானத்தில் சந்தித்தது. முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் களமிறங்கின. இதுவரை இந்த இரு அணிகளுக்கு இடையில் 12 டி20 போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறு இருக்கும் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான 13ஆவது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டெரென் சமி  எதிரணியான இங்கிலாந்து அணியை துடுப்பாட அழைப்பு விடுத்தார்.

இதற்கமைய இங்கிலாந்து அணியின்  ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் எலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆரம்ப விக்கட்டுக்காக சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த இவர்கள் இருவரும் முதல் விக்கட்டுக்காக 37 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஜேசன் ரோய் 15 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் என்டர் ரசல் வீசிய  பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹேல்சுடன் ஜோய் ரூட் இணைந்தார். ரூட்டும், ஹேல்சும் இணைந்து அதிரடியாக ஆடினார்கள். இரண்டாவது விக்கட்டுக்கு 55 ஓட்டங்களைப் பரிமாறினார்கள். 92 ஓட்டங்களாக இருக்கும் போது எலெக்ஸ் ஹேல்ஸ் 28 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜோய் ரூட் 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 48 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.அதனை அடுத்து களமிறங்கிய ஜொஸ் பட்லர் வேகமாக 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 30 ஓட்டங்களை  எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக தலைவர்  இயோன் மோர்கன்  14 பந்துகளில் 27 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சில்  டுவைன் பிராவோ, என்டர் ரஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்த சுழல் பந்து வீச்சாளர் சுலிமன் பென் 1 விக்கட்டை கைபற்றினார்.

183 என்ற பாரிய ஒரு வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஜொன்சன் சார்ல்ஸ் மற்றும் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயில் ஆகியோர் களம் புகுந்தனர். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் இனிங்ஸில் வீசப்பட்ட 2ஆவது பந்திலேயே ஜொன்சன் சார்ல்ஸ்  ஓட்டங்கள் எதையும் பெறாமல் வில்லே வீசிய பந்து வீச்சில் மொய்ன் அலியிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரிலேயே தடுமாற்றத்தை முகங் கொடுக்க நேரிட்டது. அதன் பின் ஆடுகளம் நுழைந்த மாலன் செமுவல்ஸ் அதிரடியாக 8 பவுண்டரிகளை குவித்து விட்டு 27 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க மேற்கிந்திய தீவுகள் அணி 6.4 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது. அதன் பின் ஜோடி சேர்ந்த விக்கட் காப்பாளர் தினேஷ் ராம்டின் மற்றும்  க்றிஸ் கெயில் ஜோடி 3ஆவது விக்கட்டுக்காக நிதானமாக 46 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அந்த நிலையில் தினேஷ் ராம்டின் 12 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து களம் புகுந்த சகல துறை ஆட்டக் காரர் டுவைன் பிராவோ 2 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க மேற்கிந்திய தீவுகள் அணி மீண்டும் தடுமாற்ற நிலைக்கு தள்ளப்பட்டு 113 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள் என்ற நிலையில் காணப்பட்டது.

அவ்வாறு இருக்கும் நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் க்றிஸ் கெயிலோடு ஜோடி சேர்ந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் என்டர் ரசல் போட்டியின் விதியையே மாற்றி வெற்றியை தம் அணிப் பக்கம் திருப்பினார்கள். இவர்கள் இருவரும் மிக சிறப்பாக விளையாடி 5ஆவது விக்கட்டுக்காக 35 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி வாசனையை நுகர்ந்து கொண்டு இருந்த இங்கிலாந்து அணியை தோல்வியின் பக்கம் திசை திருப்பினார்கள். க்றிஸ் கெயில், ப்ரெண்டன் மெக்கலமை தொடர்ந்து  சர்வதேச டி20 வரலாற்றில் இரண்டு சதங்களை பெற்ற 2வது வீரர் என்ற பெயரை தன் வசப் படுத்தினார். இவர் ஆட்டம் இழக்காமல் 94 நிமிடங்கள் களத்தில் துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை  விளாசி 100 ஓட்டங்களைப் பெற்று இருந்தார். அவரோடு வெற்றிக்காக துடுப்பாடிய என்டர் ரசல் 2 பவுண்டரிகள் அடங்கலாக 16 பந்துகளில் 16 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் டேவிட் வில்லே, ரீஸ் டொப்லெ, ஆதில் ரஷித் மற்றும் மொய்ன் அலி ஆகியோர்  தலா 1 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றி இருந்தார்கள்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக சதம் பெற்ற க்றிஸ் கெயில் தெரிவானார். .சி.சி டி20 உலகக் கிண்ணப்  போட்டிகளில் நாளை நடைபெரும் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.