பந்துவீச்சளார்களை பதம்பார்த்த இலங்கையின் அற்புத வெற்றிகள்!

Sri Lanka Cricket

1371

இலங்கை கிரிக்கெட் அணி T20I போட்டிகளில் பெறும் வெற்றிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இலங்கை அணியின் வெற்றிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கும் என்றும் மறக்கமுடியாத போட்டிகளாக மாறியிருக்கின்றன.

இறுதியாக இலங்கை அணி விளையாடிய 10 T20I தொடர்களில் இந்தியாவுக்கு எதிரான ஒரேயொரு தொடரில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற 15 போட்டிகளில் 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணித் தலைவர்கள்

இவ்வாறு போட்டிகளின் வெற்றிகளில் குறைகள் இருந்தாலும், ஒவ்வொரு வெற்றியும் சுவாரஷ்யத்தின் உச்சத்தை காட்டியிருக்கின்றன. மேலே குறிப்பிட்ட ஒருசில வெற்றிகளில் இந்த ஆசியக்கிண்ணத்தில் இலங்கை அணி பெற்றிருக்கும் வெற்றிகள் மேலும் பரபரப்பானவை.

இந்திய அணிக்கு எதிராக இறுதியாக ஆசியக்கிண்ணத்தில் வெற்றியிலக்கை அடைந்து, இலங்கை ரசிகர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தியிருந்த போதும், அதற்கு முதல் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இலங்கை அணியின் சாதனை பட்டியலில் இடம்பிடித்தவையாக மாறியிருக்கின்றன.

இறுதியாக நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற மூன்றாவது T20I போட்டி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளை வெற்றிபெறமுடியாத நிலையிலிருந்து, மீட்டெடுத்து வெற்றிகளை பதிவுசெய்திருக்கிறது இலங்கை.

இலங்கை அணியின் அதிகூடிய வெற்றியிலக்கு வரிசையில் இந்த மேற்குறித்த மூன்று வெற்றிகளும் இடத்தை பிடித்திருப்பதுடன், சர்வதேச T20I போட்டிகளில் இலங்கை அணி வெற்றிகரமாக அடைந்த அதிகூடிய 5 வெற்றியிலக்குகள் தொடர்பில் இந்த கட்டுரையில் பார்வையிடலாம்.

இலங்கை எதிர் இந்தியா – 2018 (175 ஓட்டங்கள்)

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக சுவாரஸ்யமான தொடர்களில் ஒன்றாக அமைந்திருந்த தொடர் நிதஹாஸ் கிண்ணத் தொடர்.

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய இந்த முத்தரப்பு T20I தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா – பங்களாதேஷ் அணிகள் முன்னேறியதுடன், இலங்கை ரசிகர்களின் முழுமையான ஆதரவுடன் இந்தியா கிண்ணத்தை வென்றதையும் நாம் பார்த்திருந்தோம்.

குறிப்பிட்ட இந்த தொடரில் பங்களாதேஷ் அணியிடம் இலங்கை தோல்விக்கண்டிருந்த போதும், தொடரின் முதல் போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்றிருந்தது.

ரோஹித் சர்மாவின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சிக்கர் தவானின் 49 பந்துகளில் விளாசிய 90 ஓட்டங்கள் மற்றும் மனிஷ் பாண்டியின் 37 ஓட்டங்களின் உதவியுடன் 174/5 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு T20I கிரிக்கெட்டில் தங்களுடைய இரண்டாவது அதிகூடிய இலக்கை அடையவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பலமான இந்திய அணிக்கு எதிரான இவ்வாறான ஓட்ட எண்ணிக்கையை அடைவது இலகுவான காரியமல்ல. எனினும், எப்போதும் இலங்கை அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் குசல் பெரேரா, இரண்டாவது இடத்தில் களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குசல் பெரேரா வெறும் 37 பந்துகளில் 66 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை இலகுவாக்க, தசுன் ஷானக மற்றும் திசர பெரேரா ஆகியோர் 6வது விக்கெட்டுக்காக 23 பந்துகளில் 39 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக திசர பெரேரா 10 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் – 2022 (176 ஓட்டங்கள்

இம்முறை ஆசியக்கிண்ணத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்று இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி. முதல் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் படுதோல்வியை பரிசாக வழங்கியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக சுபர் 4 சுற்றின் முதல் போட்டியில், ஷார்ஜா மைதானத்தில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

இந்தமுறை நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஆப்கானிஸ்தானை துடுப்பெடுத்தாட பணித்தது. ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் இலங்கை அணிக்கு சவால் கொடுத்து வெறும் 45 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார். குர்பாஸின் விக்கெட்டினை கைப்பற்றிய போதும், இப்ரஹீம் ஷர்டான் 40 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள ஆப்கானிஸ்தான் அணி 175/6 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பலமான பந்துவீச்சுக்குழாமை கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த வெற்றியிலக்கை இலங்கை அணி அடையுமா? ரஷீட் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மானின் பந்துவீச்சுகளை சரியாக எதிர்கொள்ளுமா? என்ற கேள்விகள் உருவாகியிருந்தன.

எனினும் குசல் மெண்டிஸ் ரஷீட் கான் வீசிய அவருடைய முதல் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி போட்டியின் போக்கை தமது அணி பக்கம் திரும்பினார். மெண்டிஸின் ஆரம்பத்துடன், தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அணியின் வெற்றியை உறுதிசெய்யக்கூடிய துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். எனவே, 19.1 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 179 ஓட்டங்களை பெற்று வெற்றியை உறுதிசெய்திருந்தது.

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா – 2022 (177 ஓட்டங்கள்)

இந்த ஆண்டு தசுன் ஷானகவின் பெயர் அதிகமாக ஒலித்த தருணம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டி. பலம் மிக்க அவுஸ்திரேலிய அணி முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை 2-0 என வெற்றிக்கொண்டது.

அணியின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலையில் பல்லேகலையில் அவுஸ்திரேலியாவை 3வது T20I போட்டியில் சந்தித்தது.

டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் துடுப்பாட்ட பிரகாசிப்புகளுடன் அவுஸ்திரேலிய அணி 176/5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சவாலான ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஓரளவு சிறந்த ஆரம்பம் கிடைத்தபோதும், போட்டியின் மத்திய பகுதிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்ததால், மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இலங்கை அணி 107 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்ததுடன், தசுன் ஷானக மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் மாத்திரம் களத்தில் நின்றனர்.

இலங்கை அணிக்கு இறுதி 18 பந்துகளில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தசுன் ஷானக 12 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார். இருப்பினும் இந்த தொடரில் தன்னுடைய அபார பந்துவீச்சால் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்த ஜோஸ் ஹேஷல்வூட்டின் ஓவரிலிருந்து (17வது ஓவர்) தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் ஷானக.

ஹேஷல்வூட்டின் ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள், அடுத்து ஓவரை வீசிய ஜெய் ரிச்சட்சனுக்கு எதிராக 18 ஓட்டங்களை இலங்கை அணி (அதிக ஓட்டங்களை ஷானக பெற்றிருந்தார்) பெற்றுக்கொள்ள, இறுதி ஓவருக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கேன் ரிச்சட்சன் வீசிய இறுதி ஓவரில் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக அணியை தசுன் ஷானக வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல, இலங்கை அணி தங்களுடைய இரண்டாவது (ஆசியக்கிண்ணத்தில் பங்களாதேஷ் போட்டிக்கு பின்னர் மூன்றாவது அதிகூடிய வெற்றியிலக்காக பதிவானது) அதிகூடிய வெற்றியிலக்கை கடந்து சாதனை படைத்தது. தசுன் ஷானக இந்தப்போட்டியில், 25 பந்துகளில் 54 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இலங்கை எதிர் பங்களாதேஷ் – 2022 (184 ஓட்டங்கள்)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஆசியக்கிண்ணத் தொடரானது, இலங்கை கிரிக்கெட் மீண்டெழும் தொடராக அமைந்துள்ளது.

பங்களாதேஷ் அணியின் இந்த வெற்றியில் தொடங்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளை வீழ்த்தி மேலும் பலமான அணியாக தங்களை அடையாளப்படுத்தியிருக்கிறது இலங்கை.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் போட்டி, இலங்கை அணிக்கு முக்கியமான போட்டியாக மாறியிருந்தது. ஆசியக்கிண்ணத்தொடரின் சுபர் 4 சுற்றக்கு தகுதிபெறுவதற்கு இந்த போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமாக அமைந்திருந்தது.

இலங்கை அணியின் அனுபவம் குறைந்த பந்துவீச்சை பயன்படுத்தி பங்களாதேஷ் அணி 183 ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் எந்தவீரர்களும் அரைச்சதத்தை கடக்காவிட்டாலும், அபிப் ஹொஷைன் மற்றும் மெஹிதி ஹாஸன் மிராஷ் ஆகியோர் பெறுமதியான ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

ஷார்ஜா மைதானத்தில் அதுவரையிலும் 184 என்ற வெற்றியிலக்கை எந்த அணிகளும் அடைந்திருக்கவில்லை. ஆனால் குசல் மெண்டிஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ஓட்டங்களை குவிக்க மறுமுனையில் அணித்தலைவர் தசுன் ஷானக வேகமான 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச்சென்றனர்.

இவர்களின் துடுப்பாட்டத்தை தாண்டி இலங்கை அணி தோல்வியடையும் என்ற கட்டத்தில் மூன்றே பந்துகளில் 10 ஓட்டங்களை விளாசிய அசித பெர்னாண்டோ அணிக்கு எதிர்பாராத வெற்றியை பெற்றுக்கொடுக்க, 4 பந்துகள் மீதமிருக்க 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணி வெற்றிபெற்றது.  இந்த வெற்றியிலக்கானது T20I கிரிக்கெட்டில் இலங்கை அணி அடைந்த இரண்டாவது அதீகூடிய இலக்காகவும் மாறியது.

இலங்கை எதிர் பங்களாதேஷ் – 2018 (194 ஓட்டங்கள்)

இலங்கை அணி 2018ம் ஆண்டு காலப்பகுதியில் அதிகமான தடுமாற்றத்தை காட்டிய அணியாக இருந்தது. குறிப்பாக தொடர்ச்சியாக 8 T20I போட்டிகளில் தோல்வியடைந்து சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய பின்னடைவை காட்டியிருந்தது.

குறித்த இந்த பின்னடைவுகளுக்கு முற்றுப்புள்ளியாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக மிர்பூரில் 2018ம் ஆண்டு நடைபெற்ற முதல் T20I போட்டி அமைந்திருந்தது.

பங்களாதேஷ் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டத்தொடங்கிய காலத்தில், மிகச்சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 193/5 ஓட்டங்களை குவித்தது. முஷ்பிகூர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் மற்றும் சௌமிய சர்கார் ஆகியோர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை அணிக்கு எதிராக நிர்ணயிக்கப்பட்ட அதிகூடிய T20I வெற்றியிலக்காக இந்த ஓட்ட எண்ணிக்கை இருந்தபோதும், எந்தவித தடுமாற்றமும் இன்றி இலகுவாக அடையப்பட்ட வெற்றியிலக்காகவும் இந்தப்போட்டியின் முடிவு மாறியிருந்தது.

குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளாச, இலங்கை அணியின் முன்னணி பினிசர் என வர்ணிக்கப்பட்ட திசர பெரேரா 39 ஓட்டங்களையும், தற்போதைய அணித்தலைவர் தசுன் ஷனாக 24 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 16.4 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

இந்த வெற்றியிலக்கானது தற்போதுவரை இலங்கை கிரிக்கெட் அணி T20I போட்டிகளில் அடைந்த அதீகூடிய வெற்றியிலக்காக பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<