கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள பங்களாதேஷ் வீரர்!

Sri Lanka tour of Bangladesh 2021

108
Bangladesh's Shadman Islam (R) plays a shot during the first day of the first cricket Test match between Bangladesh and West Indies at the Zohur Ahmed Chowdhury Stadium in Chittagong on February 3, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சத்மான் இஸ்லாம் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அவரது தயார்படுத்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கை தொடருக்கான தயார்படுத்தலாக தேசிய கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடவுள்ள நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக சத்மான் இஸ்லாம் முதல் சுற்றுப்போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

>>இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இணையும் சகிப் அல் ஹசன்

சத்மான் இஸ்லாம் கொவிட்-19 தொற்று குறித்து கருத்து வெளியிடுகையில், நான் தற்போதைய நிலையில், ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் உள்ளேன். கொவிட்-19 தொற்றுக்கான மூன்றாவது பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறித்த அறிக்கையில், கொவிட்-19 தொற்று இல்லையென உறுதியானால், என்னால் விளையாட முடியும் என்றார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டுமானால், தெரிவுசெய்யக்கூடிய வீரர்கள் கட்டாயமாக தேசிய கிரிக்கெட் லீக்கில் விளையாடவேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இலங்கை தொடர் எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி ஆரம்பிக்கிறது.

கடந்த ஆண்டு கொவிட்-19 தொற்று காரணமாக தேசிய கிரிக்கெட் லீக்கை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை நடத்தவில்லை. எனினும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் கிண்ணம் மற்றும் பங்கபந்து T20 தொடர்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளதால், இன்றைய தினம் (22) தேசிய கிரிக்கெட் லீக்கை ஆரம்பித்துள்ளது.

சத்மான் இஸ்லாம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்தநிலையில், தேசிய கிரிக்கெட் லீக்கில் சிறப்பாக செயற்படுவதற்கு சத்மான் இஸ்லாம் தயாராக இருந்தார். எனினும், தற்போது அவர் குறித்த தொடரில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது.

அதேநேரம், பங்களாதேஷ் அணியின் தலைவர் மொமினுல் ஹக்கிற்கு கடந்த 19ம் திகதி மேற்கொண்ட கொவிட்-19 தொற்று பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனினும், அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொவிட்-19 தொற்று அல்ல என்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே, அவரால் தேசிய கிரிக்கெட் லீக்கின் முதல் சுற்றிலிருந்து விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவிருந்தது. பின்னர், ஒக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், இலங்கையில் குறிப்பிடப்பட்ட கொவிட்-19 தொற்று நிபந்தனைகள் காரணமாக தொடர் ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<