உலக பதினொருவர் அணியில் முகமது ஷமி, ஆடில் ரஷீத் இணைப்பு

371

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் நாளை (31) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள விசேட டி20 போட்டியிலிருந்து இந்தியாவின் ஹர்திக் பாண்டியா விலகுவதாக அறிவித்துள்ளார்.

இப்போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக விளையாடுவதற்கு இந்திய அணியைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ஐசிசி உலக பதினொருவர் அணியில் அப்ரிடி விளையாடுவது உறுதி

எனினும், இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்டியா, வைரஸ் காய்ச்சல் காரணமாக குறித்த போட்டியில் விளையாடுவதில்லை என அறிவித்துள்ளார்.

இதன்படி, அவருக்குப் பதிலாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியை அணியில் இணைத்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

27 வயதான முகமது ஷமி, இதுவரை ஏழு டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற சம்பின்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையில், இயென் மோர்கன் தலைமையிலான உலக பதினொருவர் அணியில் இங்கிலாந்து மற்றுமொரு நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான ஆதில் ரஷீத்தை 12ஆவது வீரராக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான ரஷீத், இதுவரை 28 டி20 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அத்துடன், கடந்த வருடம் நடைபெற்ற சம்பின்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டியிலும் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார்.
இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் மேற்கிந்திய தீவுகளின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதங்களுக்கு உள்ளாகின. இந்த மைதானங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் வகையில் மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் அணிகள் மோதும் டி20 போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு ஐ.சி.சி இனால் அனுமதியும் வழங்கப்பட்டது.

இதன்படி, இப்போட்டிக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். இதேநேரம் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஈவின் லூயிஸ் ஆகியோரோடு 2 வருடங்களுக்குப் பிறகு அன்ட்ரு ரசலும் மேற்கிந்திய குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

உலக பதினொருவர் அணியில் முதல்முறை இடம்பெற்ற நேபாள வீரர்

இங்கிலாந்தின் இயன் மோர்கன் தலைமையிலான ஐ.சி.சி உலக பதினொருவர் அணியில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு வீரர்களும் இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒவ்வொரு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில், பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் சொந்த காரணங்களுக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக நேபாள கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சான்னேவை உலக பதினொருவர் அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேநேரம், உலக பதினொருவர் அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை நட்சத்திரமான சஹீட் அப்ரிடி இடம்பெற்றிருந்தார்.

எனினும், மூட்டு வலி உபாதையிலிருந்து குணமாகாத காரணத்தினால் ஐ.சி.சி உலக பதினொருவர் அணியில் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்த அப்ரிடி, ஒருசில தினங்கள் கழித்து மீண்டும் குறித்த போட்டியில் விளையாடுவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக பதினொருவர் அணி விபரம்

இயன் மோர்கன் (தலைவர் – இங்கிலாந்து), சஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்), தமீம் இக்பால் (பங்களாதேஷ்), தினேஷ் கார்த்திக் (இந்தியா), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), சந்தீப் லாமிச்சான்னே (நேபாளம்), மிட்செல் மெக்கிளேனகன் (நியூசிலாந்து), ஷுஐப் மலிக் (பாகிஸ்தான்), திசர பெரேரா (இலங்கை), லூக்கி ரோஞ்சி (நியூசிலாந்து), ஆதில் ரஷீத் (இங்கிலாந்து), முகமது ஷமி (இந்தியா)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<