இலங்கையுடனான ஒருநாள் தொடரில் இணையும் சகிப் அல் ஹசன்

196
Shakib Al Hassan

இலங்கை அணிக்கு எதிராக எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் அல் ஹசன் விளையாடுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை (BCB) தெரிவித்துள்ளது.

சூதாட்ட தரகர்கள் அனுகியதை தெரிவிப்பதற்கு தவறியதன் காரணமாக, ஐசிசியினால் இரண்டு வருட போட்டித் தடைக்கு முகங்கொடுத்திருந்த சகிப் அல் ஹசன், கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற தொடரில் களமிறங்கியிருந்தார்

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயற்பட்ட அவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்

எனினும், செட்டொக்ரமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது, சகிப் அல் ஹசன் உபாதைக்கு உள்ளானார். இதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விலகிக் கொண்டார்

>> பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட் அடுத்த மாதத்தில்

அதேபோல, தற்போது நடைபெற்று வருகின்ற நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் T20 தொடர்களிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவருக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள அவரது மனைவிக்கு 3ஆவது குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன் கிடைத்தது. இதனால் அவரை அணியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

இதுஇவ்வாறிருக்க, இம்முறை ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 3.2 கோடிக்கு வாங்கப்பட்ட சகிப் அல் ஹசனுக்கு, ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

>> கொரோனாவினால் T20i உலகக் கிண்ண தகுதிச்சுற்று ஒத்திவைப்பு

இதன்காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது

எதுஎவ்வாறாயினும், இலங்கை அணிக்கெதிராக மே மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணிக்காக மீண்டும் களமிறங்குவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, அவர் ஐபிஎல் தொடரின் இடைநடுவில் விலகி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

ஐசிசி இன் ஆடவர் ஒருநாள் லீக் தொடரின் கீழ் நடைபெறவுள்ள பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி மே மாதம் 15 அல்லது 17ஆம் திகதி பங்களாதேஷை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<