அதிரடி மாற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒருநாள் தொடரில் சந்திக்கும் இலங்கை

2152

தமது தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தை டெஸ்ட் தொடரில் கிடைத்த வரலாற்று வெற்றியுடன் அட்டகாசமாக ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி, தமது சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டமாக தென்னாபிரிக்க வீரர்களுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகின்றது.

ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளதும் கடந்த காலம்

தென்னாபிரிக்க அணி கிரிக்கெட் போட்டிகளுக்கு மீள் பிரவேசம் மேற்கொண்ட பின்னர் இரண்டு அணிகளும் 1992ஆம் ஆண்டில் இருந்து ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகின்றன.  

தென்னாபிரிக்காவில் அதிரடியை வெளிக்காட்டிய இலங்கை வீரர்கள்

தென்னாபிரிக்க அழைப்பு பதினொருவர் மற்றும் இலங்கை அணிகளுக்கு …

இதுவரையில் இரண்டு அணிகளும் 71 ஒருநாள் போட்டிகளில் மோதியிருப்பதோடு அவற்றில் தென்னாபிரிக்க அணி 38 வெற்றிகளையும், இலங்கை அணி 31 வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது. இரு அணிகளுக்குமான ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி சமநிலை அடைய மற்றுமொரு போட்டி முடிவுகள் எதுவும் இன்றி நிறைவடைந்திருக்கின்றது.

இதேநேரம், தென்னாபிரிக்காவுடன் அதன் சொந்த மண்ணில் நான்கு ஒருநாள் தொடர்களில் ஆடியுள்ள இலங்கை அணி அவை அனைத்தினையும் பறிகொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் இலங்கை அணிக்கு டெஸ்ட் தொடரில் பெற்றுக்கொண்ட வெற்றி போன்று மற்றுமொரு வரலாற்று தொடர் வெற்றியினை பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Photos: Sri Lanka Practices ahead of 1st ODI in South Africa

இலங்கை அணி 

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் மூலம் ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றுள்ள இலங்கை அணி, கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் விளையாடும் சவால்மிக்க கடைசி ஒருநாள் தொடராக தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகள் அமைகின்றன.  

எனவே, உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் இலங்கை அணிக்குழாம், தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரின் மூலமே தீர்மானிக்கப்படவிருக்கின்றது. இந்த ஒரு நாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியிலும் டெஸ்ட் தொடர் போன்று அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற காரணத்தினால் நல்ல முடிவுகளே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெறும் 17 வீரர்கள் ……..

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் (குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில்) இலங்கை அணியின் பலவீனமாக இருப்பது அதன் பந்துவீச்சாகும். இலங்கை அணி தமது பந்துவீச்சுத்துறையினை முன்னேற்றுவதற்காக முயன்று வருகின்ற போதிலும் அது அண்மைக்காலமாக கைகூடாமல் இருந்து வருகின்றது. எனினும், லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணியில் விஷ்வ பெர்னாந்து, இசுரு உதான மற்றும் அகில தனன்ஜய போன்றோர் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இந்த மோசமான நிலை விரைவில் மாறும் என நம்பப்படுகின்றது.

இதில் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான விஷ்வ பெர்னாந்து தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களை டெஸ்ட் தொடரில் அச்சுறுத்திய முக்கிய வீரராக இருந்ததோடு, ஏனைய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதான பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் மற்றும் T10 லீக் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வெளிநாட்டு தொடர்களில் திறமையினை வெளிக்காட்டியிருந்தார்.

இதேநேரம், மாய சுழல் வீரரான அகில தனன்ஜய தனது பந்துவீச்சுத்தடையினை அடுத்து இலங்கை அணியில் இணைந்திருக்கின்றார். அகில தனன்ஜய தென்னாபிரிக்க அணியுடன் இலங்கை கடைசியாக விளையாடிய ஒருநாள் தொடரிலேயே ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை (6/29) பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அகில தனன்ஜயவோடு சேர்த்து இரண்டு கைகளினாலும்  பந்துவீசக்கூடிய அறிமுக சுழல் வீரரான கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியில் இணைந்திருப்பதும் பெரும் பலமாகும். இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் பந்துவீச்சோடு மட்டுமல்லாது துடுப்பாட்டத்திலும் ஜொலிக்க கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகில தனன்ஜயவின் தடையை நீக்கியது ஐசிசி

பந்துவீச்சுத்துறை ஒருபுறமிருக்க இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறையும் மிகவும் வலுவான வீரர்களுடன் நிரப்பப்பட்டிருக்கின்றது. இதில் முக்கிய உள்ளடக்கங்களாக  அவிஷ்க பெர்னாந்து, ஓசத பெர்னாந்து அஞ்செலோ பெரேரா மற்றும் ப்ரியாமல் பெரேரா போன்றோரினை குறிப்பிடலாம். இதில் அவிஷ்க பெர்னாந்து அயர்லாந்து A அணிக்கு எதிராக இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் மிகச் சிறந்த துடுப்பாட்ட சராசரியுடன் 500 இற்கு கூடுதலான ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியிருந்த ஓசத பெர்னாந்து, அஞ்செலோ பெரேரா மற்றும் ப்ரியமால் பெரேரா ஆகியோர் இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களாக அபாரம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வீரர்களுடன் சேர்த்து இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்பிய உபுல் தரங்க, குசல் பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், திசர பெரேரா போன்றோரும் இலங்கை அணியின் துடுப்பாட்டத்திற்கு பலம் தரக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

எனினும், இந்த ஒருநாள் தொடரில் காயம், துடுப்பாட்ட பாணியினை இழந்தது போன்ற சில காரணங்களினால் அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் ஷானக்க மற்றும் தினேஷ் சந்திமால் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது கவலைதரும் விடயமாகும்.

இலங்கை குழாம்

லசித் மாலிங்க (அணித் தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (உப தலைவர்), அவிஷ்க பெர்னாந்து, உபுல் தரங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, அகில தனன்ஜய, அஞ்செலோ பெரேரா, ஓசத பெர்னாந்து, கமிந்து மெண்டிஸ், ப்ரியமால் பெரேரா, இசுரு உதான, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித, லக்ஷான் சந்தகன்

தென்னாபிரிக்க அணி

இலங்கை போன்று உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக தென்னாபிரிக்க அணி விளையாடும் சவால்மிக்க கடைசி தொடராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் அமைகின்றது. அனுபவம் குறைந்த இலங்கை  வீரர்களுடனான டெஸ்ட் தொடரை தமது சொந்த மண்ணில் வைத்து தென்னாபிரிக்க அணி பறிகொடுத்த போதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், தென்னாபிரிக்க அணி இலங்கையுடனான தமது கடைசி ஒருநாள் தொடருடன் சேர்த்து,  தாம் பங்குபற்றிய இறுதி நான்கு ஒருநாள் தொடர்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றது.

<<தென்னாபிரிக்க அழைப்பு அணியுடன் பயிற்சிப் போட்டியில் ஆடும் இலங்கை அணி – புகைப்படங்கள்>>

கடைசியாக பாகிஸ்தானை தமது சொந்த மண்ணில் வைத்து ஒருநாள் தொடர் ஒன்றில் தோற்கடித்த தென்னாபிரிக்க அணி கடந்த ஐந்து ஆண்டுகளில் தமது சொந்த மண்ணில் இந்தியா தவிர்ந்த வேறு எந்த அணிகளுடனும் ஒருநாள் தொடரினை பறிகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் மாற்றங்கள் சிலவற்றை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி முதல் மூன்று போட்டிகளுக்கான ஒரு நாள் குழாத்தினை மட்டுமே அறிவித்திருக்கின்றது.

தென்னாபிரிக்கா, அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக் குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லாவிற்கு ஓய்வினை வழங்கியுள்ளது. இந்நிலையில், தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறை அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ், குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் டேவிட் மில்லர் போன்றோரினால் பலப்படுத்தப்படுகின்றது.  

இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து ஹஷிம் அம்லா நீக்கம்

இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சுத்துறை வேகப்பந்து வீச்சாளர்களான டேல் ஸ்டெய்ன் மற்றும் ககிஸோ றபாடா ஆகியோரினால் வலுப்படுத்தப்படுகின்றது. அதேவேளை, அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கும் லுங்கி ன்கிடி அறிமுக வேகப்பந்து வீச்சாளர் என்ரிச் நோர்ட்ஜே மற்றும் தப்ரைஸ் சம்சி மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரும் தமது தரப்பிற்கு பெறுமதி சேர்ப்பார்கள் என நம்பப்படுகின்றது.

இந்த வீரர்களில் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சு இலங்கை அணி கடைசியாக தென்னாபிரிக்காவிற்கு 2017ஆம் ஆண்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது இலங்கை வீரர்களை 5-0 என ஒருநாள் தொடரில் வைட்வொஷ் செய்ய முக்கிய காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க குழாம்

பாப் டு ப்ளேசிஸ் (அணித்தலைவர்), குயின்டன் டி கொக், ரீசா ஹென்ரிக்ஸ், இம்ரான் தாஹீர், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி ன்கிடி, என்ரிச் நொர்ட்ஜே, என்டைல் பெஹ்லுக்வேயோ, ட்வைன் ரெட்டோரியஸ், ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்சி, டேல் ஸ்டெய்ன், ரஸ்ஸி வன் டர் டஸ்ஸன்

இறுதியாக…

நடைபெறப்போகும் ஒருநாள் தொடர் வரலாற்று வெற்றி ஒன்றின் மூலம் புதிய உத்வேகத்தினை பெற்றிருக்கும் இலங்கை அணிக்கும், சொந்த மண்ணில் வைத்து அனுபவம் குறைந்த வீரர்களினால் தோற்கடிக்கப்பட்ட உலகின் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ளது.  

இலங்கை அணிக்கு திடீர் வெற்றி எப்படி சாத்தியமாகியது?

ஆகவே, இந்த ஒரு நாள் தொடரில் விறுவிறுப்பிற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகின்றது. இந்த ஒருநாள் தொடர் எப்படி இருக்கப்போகின்றது என்பதை ஞாயிற்றுக்கிழமை (03) ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இடம்பெறவுள்ள போட்டியுடன் பார்க்க முடியுமாக இருக்கும்.

ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதலாவது ஒருநாள் போட்டிமார்ச் 3 – ஜொஹன்னஸ்பேர்க்
  • இரண்டாவது ஒருநாள் போட்டிமார்ச் 6 – செஞ்சூரியன்
  • மூன்றாவது ஒருநாள் போட்டிமார்ச் 10 – டர்பன்
  • நான்காவது ஒருநாள் போட்டிமார்ச் 13 – போர்ட் எலிசபெத்
  • ஐந்தாவது ஒருநாள் போட்டிமார்ச் 16 – கேப் டவுன்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<