நாணயக்காரவின் அபாரத்தால் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு இன்னிங்ஸ் வெற்றி

97

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் (13) ஒரு போட்டி நிறைவடைந்ததோடு மூன்று போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித மரியார் கல்லூரி

நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி தமது சொந்த மைதானத்தில் முதல் இன்னிங்சை 177 ஓட்டங்களோடு முடித்த பின்னர் துடுப்பாடிய புனித மரியார் கல்லூரி 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால், பலோவ் ஒன் முறையில் மீண்டும் துடுப்பாடிய கேகாலை மரியார் கல்லூரி வீரர்கள் இரண்டாம் இன்னிங்சில் மீள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முதல் நாள் ஆட்ட நிறைவில் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாற்றத்தினையே காட்டியிருந்தனர்.

போட்டியின் இறுதி நாளில் 35 ஓட்டங்களினை மாத்திரமே பெற முடிந்த மரியார் கல்லூரி 85 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியிடம் இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது. அபரிமிதமாக செயற்பட்ட இடதுகை சுழல் வீரர் கெளமல் நாணயக்கார 36 ஓட்டங்களில் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை தந்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)– 177 (48) வினுஜ ரன்புல் 60, தேவக பீரிஸ் 51, அகலன்க பெத்தியகொட 3/27

புனித மரியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 75 (25.3) நதுக்க பெர்னாந்து 5/24

புனித மரியார் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 85 (45.3) கெளமல் நாணயக்கார 7/36, சவிந்து பீரிஸ் 3/16

போட்டி முடிவு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் வெற்றி


லும்பினி கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

ஜோசப் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பான இப்போட்டியில் முதலில் ஆடிய லும்பினி கல்லூரிக்கு இடதுகை சுழல் வீரர் துனித் வெல்லால்கே அதிர்ச்சி அளித்தார். இதனால், வெறும் 78 ஓட்டங்களினையே லும்பினி கல்லூரி முதல் இன்னிங்சில் பெற்றது. வெல்லால்கே 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை பதம்பார்த்திருந்தார்.

தொடர்ந்து துடுப்பாடிய புனித ஜோசப் கல்லூரி முதல் நாள் ஆட்டநேர நிறைவின் போது 63 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சில் வலுப்பெற்றிருந்தது. இதில் லக்ஷான் கமகே 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்று ஜோசப் கல்லூரிக்கு வலுச்சேர்த்திருந்தார். இதேவேளை, ஓட்டங்களை சிறிது வாரி இறைத்திருந்தாலும் அமித தாபரே லும்பினி கல்லூரிக்காக இன்றைய தினம் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 78 (29.5) துனித் வெல்லால்கே 5/21, லக்ஷான் கமகே 3/37

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 285/8 (63) லக்ஷான் கமகே 72*, ரெவான் கெல்லி 44, நிப்புன் சுமணசிங்க 40, விமுக்தி குலத்துங்க 4/91

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


 புனித அந்தோனியர் கல்லூரி எதிர் மஹாநாம கல்லூரி

புளும்பீல்ட் மைதானத்தில் தொடங்கியிருந்த இந்த ஆட்டத்தில் மஹாநாம கல்லூரி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் வத்தளை புனித அந்தோனியர் கல்லூரியினை துடுப்பாடப் பணித்தது.

அந்தோனியர் கல்லூரிக்கு நல்ல முறையில் முதல் இன்னிங்ஸ் அமையவில்லை. 98 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்டுக்களையும் அவர்கள் பறிகொடுத்தனர். துடுப்பாட்டத்தில் அவிஷ்க தரிந்து மாத்திரம் 20 ஓட்டங்களை எட்ட மஹாநாம கல்லூரியின் சோனால் தினுஷ 4 விக்கெட்டுக்களையும், ஹெசான் ஹெட்டியாராச்சி 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதையடுத்து தங்களது முதல் இன்னிங்சினை தொடங்கிய மஹாநாம வீரர்கள் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 98 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து வலுவாகக் காணப்பட்டிருந்தனர். தினுக்க ரூபசிங்க 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது நிற்கின்றார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 98 (56.2) அவிஷ்க தரிந்து 20, சோனால் தினுஷ 4/07, கேஷான் ஹெட்டியராச்சி 3/12, ஹெசான் சந்தீப்ப 2/14

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 98/3 (36) தினுக்க ருபசிங்க 42*

போட்டியின் இரண்டாம் நாளை தொடரும்


 மஹிந்த கல்லூரி எதிர் ஆனந்த கல்லூரி

காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி மஹிந்த கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

இதன்படி முதல் இன்னிங்சில் ஆடிய மஹிந்த கல்லூரி ரேஷான் கவிந்த (66), நிப்புன் மலிங்க (51) மற்றும் கவிந்து எதிரிவீர (50) ஆகிய மூவரின் அரைச்சத உதவியோடு 255 ஓட்டங்களினை முதல் இன்னிங்சில் குவித்திருந்தது. ஹசிந்து சமிக்க கொழும்பு ஆனந்த கல்லூரிக்காக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து முதல் நாள் ஆட்ட நேர நிறைவிலேயே முதல் இன்னிங்சினை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

மஹிந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 255 (88.1) ரேஷான் கவிந்த 66, நிப்புன் மலிங்க 51, கவிந்து எதிரிவீர 50, ஹசிந்து சமிக்க 5/49

ஆனந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 22/1 (4.4)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்