ஆஸி. மோதலில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு முக்கிய இழப்பு

ICC ODI World Cup 2023

970
ICC ODI World Cup 2023

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பதிரன ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண மோதலில் பங்கேற்பது சந்தேகம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>சகீப் அல் ஹஸன், கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு உபாதை

இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க தசை உபாதைக்கு ஆளாகியிருப்பதும், மதீஷ பதிரன தோற்பட்டை உபாதைக்கு முகம் கொடுத்திருப்பதுமே இரண்டு வீரர்களும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழந்ததற்கான காரணமாக ThePapare.com இற்கு அறியக்கிடைத்திருக்கின்றது.

திங்கட்கிழமை (16) லக்னோவில் நடைபெறவிருக்கும்  அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ண மோதலில் பங்கெடுக்க இன்று (14) இலங்கை அணி பயிற்சிகளில் ஈடுபடும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை அணியின் பயிற்சிகளில் இன்று ஷானக்க, பதிரன ஆகியோர் பங்கெடுக்காத நிலையிலையே இலங்கை கிரிக்கெட் சபை மூலம் இரண்டு வீரர்களதும் உபாதை குறித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணிக்காக அண்மைய நாட்களில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத போதும் தசுன் ஷானக்க தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்தார். அதேநேரம் மதீஷ பதிரன உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாடியிருந்த இரண்டு போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்த தவறியிருந்தார்.

>>ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் கிரிக்கெட் போட்டிகள்

இதேநேரம் இந்த இரண்டு வீரர்களும் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து முழுமையாக வெளியாகியதாக சில தகவல்கள் வெளி வருகின்ற போதிலும் அது தொடர்பில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அதேநேரம் இந்த இரண்டு வீரர்களும் இல்லாத நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியானது லஹிரு குமார மற்றும் கசுன் ராஜித ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களை இலங்கை குழாத்தில் இணைக்கும் என நம்பப்படுகின்றது.

விடயங்கள் இவ்வாறு இருக்க பாகிஸ்தான் போட்டியில் சிறு உபாதைச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருந்த இலங்கை அணியின் பிரதி தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் குசல் பேரேரா ஆகியோர் அவுஸ்திரேலிய மோதலில் ஆடுவதற்கு பூரண உடற்தகுயினைப் பெற்றிருப்பதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<