விஷ்வ சத்துரங்கவின் சதத்தோடு வலுவடைந்திருக்கும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி

129

19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையிலான (இரண்டு நாட்கள் கொண்ட) சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஐந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தது.

வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் தர்மராஜ கல்லூரி, கண்டி

கண்டி தர்மராஜ கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வெஸ்லி கல்லூரி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாடிய வெஸ்லி கல்லூரி அணியில் மொவின் சுபசிங்க (103) சதம் கடந்தார். சுபசிங்கவுடன் சேர்த்து புத்திம விஜேயசுந்தர, ராகுல் குணசேகர மற்றும் ஹசித் கீசர ஆகியோர் அரைச்சதம் கடக்க 69.3 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களுடன் காணப்பட்ட வெஸ்லி கல்லூரி அணி தமது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது. தர்மராஜ கல்லூரியின் பந்து வீச்சில் உபேந்திர வர்ணகுலசூரிய 4 விக்கெட்டுக்களை சாய்த்திருந்ததார்.

அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

வெஸ்லி கல்லூரி அணியின் அபாரமான முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து, தமது முதல் இன்னிங்சில் ஆடிய தர்மராஜ கல்லூரி அணி ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல்  இன்னிங்ஸ் ) – 352/8d (69.3) மொவின் சுபசிங்க 103, புத்திம விஜேசுந்தர 75, ராகுல் குணசேகர 53, ஹசித் கீசர 51, உபேந்திர வர்ணகுலசூரிய 4/89

தர்மராஜ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 62/2 (23) – கசுன் குணவர்தன 25, சசிந்த சேனநாயக்க 23*


ஜனாதிபதி கல்லூரி, கோட்டை எதிர் குருகுல கல்லூரி, களனி

கொழும்பு ஜனாதிபதி கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜனாதிபதி கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு  செய்து முதல் இன்னிங்சில் 226 ஓட்டங்களை குவித்தது. ஜனாதிபதி கல்லூரியின் துடுப்பாட்டத்தில் இரங்க ஹஷான் 47 ஓட்டங்களையும், றிபாஸ் மஹ்ரூப் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுத்தந்தனர். மறுமுனையில் மலிந்து விதுரங்க 4 விக்கெட்டுக்களை வெறும் 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து குருகுல கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த குருகுல கல்லூரி அணி, ஆட்டத்தின் முதல் நாள் நிறைவில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. குருகுல கல்லூரியின் இந்த நிலைக்கு காரணமான ஜனாதிபதி கல்லூரியின் ஹசிந்து ப்ரமுக 6 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 226 (58.1) – இரங்க ஹஷான் 47, றிபாஸ் மஹ்ரூப் 45, மலிந்து விதுரங்க 4/19

குருகுல கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 138 (32.5) – ப்ரவீன் நிமேஷ் 58, லசிந்து அரோஷ 33, ஹசிந்து ப்ரமுக 6/34


பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித அந்தோனியர் கல்லூரி, வத்தளை

அந்தோனியர் கல்லூரியின் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த விருந்தாளிகளான பிரின்ஸ் ஒப் கல்லூரி வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தனர்.

முதலில் துடுப்பாடத் தொடங்கிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்கு இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய கிரிக்கெட் அணி வீரர் விஷ்வ சத்துரங்க அபார சதம் கடந்து (142) வலுவளித்திருந்தார். சத்துரங்கவின் இந்த சதத்தின் உதவியோடு பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்சில் 323 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில்  தம்முடைய ஆட்டத்தை இடைநிறுத்தியது.

தொடர்ந்து வத்தளை வீரர்கள் பெரிய இலக்கு ஒன்றை நோக்கி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இதன்படி போட்டியின் முதல் நாள் நிறைவில் புனித அந்தோனியர் கல்லூரி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 323/8d (61.1) – விஷ்வ சத்துரங்க 142, தரிந்து பீரிஸ் 61, வினுஜ ரன்புல் 44, கவீஷ துலஞ்சன 3/63

புனித அந்தோனியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 56/3 (33) – மதுஷ ஹெட்டியாராச்சி 22*


மஹாநாம கல்லூரி எதிர் சென். ஜோன்ஸ் கல்லூரி, பாணதுறை

பண்டாரகம பொது மைதானத்தில் ஆரம்பமான இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாநாம கல்லூரி அணி முதலில் துடுப்பாடி 63.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சில் 223 ஓட்டங்களை குவித்தது. மஹாநாம கல்லூரிக்காக அதிகபட்சமாக பிஷான் மெண்டிஸ் 57 ஓட்டங்களை பெற்றார். மறுமுனையில் சசித்த மனுப்பிரியவினால் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டிருந்தது.

ஜிம்பாப்வே ஒரு நாள் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள்

பின்னர் தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய பாணதுறை வீரர்கள் 63 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்ட போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

மஹாநாம கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 223 (63.3) – பிஷான் மெண்டிஸ் 57, பவந்த வீரசிங்க 38, சசித்த மனுப்பிரிய 4/99

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 63/6 (23) – கேஷான் ஹெட்டியராச்சி 3/19


புனித அலோசியஸ் கல்லூரி, காலி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவ

காலி சர்வதேச மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி அடைந்த செபஸ்டியன் வீரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை எதிரணிக்கு வழங்கியிருந்தனர்.

இதன்படி முதலில் துடுப்பாடிய அலோசியஸ் கல்லூரி 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிந்து சஞ்சன 70 ஓட்டங்களை அலோசியஸ் கல்லூரிக்காக போராடி குவித்திருந்த வேளையில் செபஸ்டியன் கல்லூரியின் இடதுகை சுழல் வீரர் வினுஜ ரணசிங்க 8 விக்கெட்டுக்களை அபாரமாக கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட்டத்தை தொடங்கிய செபஸ்டியன் கல்லூரி வீரர்கள் போட்டியின் முதல் நாள் நிறைவுறும் போது 135 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலையில் காணப்பட்டிருந்தனர். நிசித்த அபிலாஷ் அரைச்சதம் (71) ஒன்றை செபஸ்டியன் கல்லூரியின் இந்த இன்னிங்சில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 136 (60) – ரவிந்து சஞ்சன 70, வினுஜ ரணசிங்க 8/41

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 135/2 (35) – நிசித்த அபிலாஷ் 71

இன்று ஆரம்பமாகிய அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.