இலங்கை அணியின் இறுதி வாய்ப்பாக மாறுமா இங்கிலாந்து மோதல்?

3164

சுபர் 12 சுற்றில் உள்ள குழு 1 அணிகளுக்கான கடைசி குழுநிலைப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி நாளை (05) இங்கிலாந்தை எதிர்கொள்கின்றது.

>> கோலிக்கு எதிராக ஐசிசி இடம் புகார் அளிக்கவுள்ள பங்களாதேஷ்

கவனிக்க வேண்டியவை

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளின் அரையிறுதி வாய்ப்பு

குழு 1 இல் காணப்படும் இலங்கை – இங்கிலாந்து அணிகள் இதுவரை தலா 2 வெற்றிகள் வீதம் சுபர் 12 சுற்றில் பதிவு செய்திருக்கின்றன. எனினும் அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான சுபர் 12 சுற்றுப் போட்டி மழையினால் கைவிடப்பட்டதனை அடுத்து அதில் ஒரு மேலதிக புள்ளியை பெற்றுள்ள இங்கிலாந்து 5 புள்ளிகள் உடனும், இலங்கை அணி 4 புள்ளிகளுடனும் காணப்படுகின்றன.

எனவே வெள்ளிக்கிழமை (04) நடைபெறுகின்ற நியூசிலாந்து – அயர்லாந்து மோதல், ஆப்கான் – அவுஸ்திரேலிய மோதல் என இரண்டு போட்டிகளின் முடிவுகள் சாதகமாக வராத போதும் இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியுடனான போட்டியில் வெற்றி பெறும் போது அரையிறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. இதற்கு இங்கிலாந்து அணி இலங்கை அணியினை வீழ்த்துவதோடு சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்தினையும் (NRR) கொண்டிருக்க வேண்டும்.

>> பக்ஹர் ஷமானுக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இணையும் வீரர்!

ஆனால் இலங்கை அணிக்கு அவ்வாறு இல்லை. இலங்கை அணி T20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தெரிவாக நியூசிலாந்து – அயர்லாந்து மோதல், ஆப்கான் – அவுஸ்திரேலிய மோதல் என இரண்டு போட்டிகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இலங்கைக்கு சாதகமாக அமைய வேண்டும். அதாவது அயர்லாந்து அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அத்துடன் இந்த வெற்றிகளுடன் சேர்த்து இலங்கை தமக்கு எஞ்சியிருக்கும் இங்கிலாந்து மோதலில் வெற்றி பெற்று சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்தினை (NRR) கொண்டிருக்கவும் வேண்டும். இவை நடைபெற்றால் மாத்திரமே இலங்கை அணிக்கு அரையிறுதி செல்லும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ஆனால் வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டு போட்டிகளும் இலங்கை அணிக்கு சாதகமாக அமையாத சந்தர்ப்பத்தில் இலங்கை அணி T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்து அயர்லாந்து அணியுடன் குழு 1  இல் இருந்து உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் மூன்றாவது அணியாக மாறும்.

இலங்கை – இங்கிலாந்து T20 மோதல்கள்

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 போட்டிகளை எடுத்துப் பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. இலங்கை இங்கிலாந்துடன் கடைசியாக 2014ஆம் ஆண்டிலேயே T20 போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதோடு, கடைசியாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையில் நடைபெற்ற ஏழு T20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். எனவே மிகப் பெரும் சவால் இலங்கை அணிக்கு இங்கிலாந்து மூலம் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது தெளிவாகின்றது.

>> அவுஸ்திரேலியா அணியில் மூவர் காயங்களால் அவதி

காலநிலை

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான போட்டி நடைபெறும் சிட்னி நகரில் நாளை மழை பெய்வதற்கான எந்த வாய்ப்புக்களும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. எனவே இலங்கை – இங்கிலாந்து மோதல் மழையின் குறுக்கீடு இன்றி சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணி T20 உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை என்றே கூற முடியும். பவர் பிளே இல் அதிக விக்கெட்டுக்களை பறிகொடுத்தது இலங்கை அணிக்கு நியூசிலாந்து மோதலில் பெரும் பின்னடைவாக மாறி இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த தவறினை ஓரளவு இலங்கை அணி சரி செய்திருந்தது. அது இலங்கை அணிக்கும் போட்டியின் வெற்றியாளர்களாக மாற வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருந்தது.

ஆனால் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்தும் இலங்கை அணிக்கு கைகொடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்திலேயே அழுத்தங்கள் இன்றி பெரிய ஓட்டங்களை மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் மூலம் இலங்கை அணிக்காக பெற முடியும்.

உபாதைகள் மூலம் இந்த தொடரில் சில முக்கிய பந்துவீச்சாளர்களை இழந்த போதும் இலங்கை அணி பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டது என்றே கூற முடியும். அதேநேரம் களத்தடுப்பில் மோசமான சில தவறுகள் போட்டியே போக்கினையே மாற்றின. எனவே களத்தடுப்பு தவறுகளை இலங்கை அணி தொடர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும்.

அதேநேரம் இலங்கை அணி நாளைய போட்டியில் மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாது எனவும் நம்பப்படுகின்றது. ஆப்கான் மோதலில் களமிறங்கிய அதே அணி நாளைய போட்டியிலும் களமிறங்கலாம்.

>> T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் குடியேறிய வீரர்கள்

எதிர்பார்ப்பு XI

தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, பிரமோத் மதுசான், மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித

இங்கிலாந்து அணி

இந்த உலகக் கிண்ணத் தொடரில் களமிறக்கப்பட்டிருக்கும் சிறந்த அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து காணப்படுகின்றது. அத்தோடு துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்திலும் சமநிலையான வீரர்களை கொண்ட அணிக் குழாத்துடன் உள்ள அணியாகவும் இங்கிலாந்து இருக்கின்றது.

இங்கிலாந்து அணியினைப் பொறுத்தவரை ஜொஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் அணியின் துடுப்பாட்ட தூண்களாக  இருப்பதோடு பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்றவர்கள் அணிக்கு சகலதுறைவீரர்களாக நம்பிக்கை தருகின்றனர்.

மறுமுனையில் வேகத்தின் மூலம் எதிரணி துடுப்பாட்டவீரர்களை திணறடிக்கும் மார்க் வூட், மாய சுழல்வீரர் ஆதில் ரஷீட் என T20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களையும் இங்கிலாந்து கொண்டிருக்கின்றது.

அத்துடன் இங்கிலாந்தும் தமது அரையிறுதி வாய்ப்புக்காக கட்டாய வெற்றியினைப் பதிவு செய்ய வேண்டும் என்பதனால் நாளைய போட்டியில் சவால் நிறைந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்பு XI

ஜோஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ரி புரூக், பென் ஸ்டோக்ஸ், சேம் கர்ரன், டாவிட் மலான், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீட், மார்க் வூட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<