அணித் தலைவராகவுள்ள மெதிவ்ஸ் உடற்தகுதி சோதனையில் தேர்வு

5057
angelo mathews

ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று (07) நடைபெற்ற உடற்தகுதி சோதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதாக ThePapare.com க்கு நம்பகமான வகையில் தெரியவருகிறது.

[rev_slider LOLC]

டிசம்பர் மாதம் இந்தோரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T-20 போட்டியின்போது பின்தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் தற்பொழுது சுகம்பெற்றுள்ளார்.   

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள்..

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2019 ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டி வரை உடற்தகுதியுடன் இருப்பதை கருத்தில் கொண்டு காயங்களை தவிர்ப்பதற்காக மெதிவ்ஸ் மீண்டும் பந்து வீசாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன.  

அவர் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணிக்கு மீண்டும் ஒருமுறை தலைவராக நாளை (ஜனவரி 9) நியமிக்கப்படுவார் என நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேபோன்று அவர் அடுத்த உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்கு தலைவராக செயற்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

ஜிம்பாப்வேயுடனான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இலங்கை தோற்றதை அடுத்து மெதிவ்ஸ் கடந்த ஜூலை மாதம் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவர் இதுவரை 98 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை வகித்துள்ளார். அதில் அணி 47 போட்டிகளில் வென்றுள்ளதுடன் 45 போட்டிகளில் தோற்றுள்ளது.  

மெதிவ்ஸின் ராஜினாமாவை அடுத்து இலங்கை ஒரு நாள் அணிக்கு சரியான தலைமை இல்லாமல் போனதால் உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா என நான்கு வீரர்கள் மாறி மாறி தலைமை வகித்தனர்.  

பங்களாதேஷில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணியும் பங்கேற்கின்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி வரும் 13ஆம் திகதி நாட்டில் இருந்து பயணமாகவுள்ளது. இந்த முத்தரப்பு தொடரை அடுத்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு T-20 சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.   

அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே…

மெதிவ்ஸ் தலைவராக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் அவர் மூவர் கொண்ட தேர்வுக் குழுவில் ஒருவராக இடம்பெறுவார். இதில் புதிய தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரும் அடங்குகின்றனர்.  

“சுற்றுப்பயணத்தின்போது இறுதி பதினொரு வீரரை அவரால் (ஹதுருசிங்க) தேர்வு செய்ய முடியும். அணியின் முகாமையாளர் மற்றும் அணித் தலைவரும் சக தெரிவாளர்களாக இருப்பார்கள்” என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.    

1973 இலங்கை விளையாட்டு சட்டத்தில் பயிற்சியாளருக்கு தேசிய தெரிவாளராக செயற்பட அனுமதி இல்லை. என்றபோதும் இந்த மாற்றத்திற்கு நேற்றைய சிறப்பு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தேசிய தேர்வுக் குழுவால் குழாம் தேர்வுசெய்யப்படும்போது தலைமை பயிற்சியாளருக்கு தீர்மானம் எடுக்க அனுமதி இல்லை.