அடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை

215

விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்படுகின்ற பயிற்சியாளர்களுக்கான அடையாள அட்டை இல்லாமல் செயற்படுகின்ற நாட்டின் அனைத்து பயிற்சியாளர்களையும் 2022 முதல் தடை செய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து தொழில்முறை பயிற்சியாளர்களுக்கும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை உடனடியாக வழங்கி, பயிற்சியாளர்களுக்கான தேசியப் பட்டியலை அமைக்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் தேசிய விளையாட்டு ஆய்வு நிறுவகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு 5,000 ரூபா உதவித் தொகை

எனவே, 2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தொழில்முறை பயிற்சியாளர்களாக தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற அனைவரும் பயிற்சியாளர்களுக்கான தேசியப் பட்டியலில் பதிவுசெய்யப்பட்டு அடையாள அட்டைகளை வழங்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். 

இதன்படி, பயிற்சியாளர்களுக்கான அடையாள அட்டை இல்லாமல் செயற்படுகின்ற அனைத்து பயிற்சியாளர்களையும் 2022 முதல் தடைசெய்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. 

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து பயிற்சியாளர்களிடமும் ஆலோசனை பெற்று பயிற்சியாளர்களுக்கான கொள்கை பிரகடனத்தை அமைத்து, அதை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக வெளியிடுவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைக்கு அமைய இந்நாட்டின் விளையாட்டினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான பேரவையொன்றை இந்த வருடத்திற்குள் நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தக் கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக இந்நாட்டில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களினதும் தொழில் கௌரவம் மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கென்று பிரத்தியேகமான ஒழுக்கக் கோவையொன்றும் நடைமுறைக்கு வரவுள்ளது. 

இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ரவின் மேற்பார்வையின் கீழ் சீ. ரத்னமுதலியின் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான கொள்கை வரைவு செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான கொள்கைப் பிரகடனத்தை உருவாக்குவதின் முதல்கட்டமாக மெய்வல்லுனர், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களைச் சேர்ந்த பயிற்சியாளர்களிடம் கடந்த ஜுன் மாதம் 24 ஆம் திகதி ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் அதிகளவான பயிற்சியாளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் பாடசாலை மற்றும் விளையாட்டு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயிற்சியாளர்கள் நாடு பூராகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அவர்களுக்கென்று தனியான அமைப்போ அல்லது பேரவையொன்றோ இதுவரை இலங்கையில் ஸ்தாபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

எனவே, விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான அனுமதி அட்டையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகவல்களைப் பெற்றுக்கொள்ள தேசிய விளையாட்டு ஆய்வு நிறுவகத்தின் WWW.niss,gov.lk இணையத்தளத்துக்குச் சென்று, அங்குள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<