SAFF மகளிர் சம்பியன்ஷிப்பில் இன்று (ஒக்டோபர் 21) நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பலமிக்க பூட்டான் மகளிர் அணியிடம் இலங்கை மகளிர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற, தமது அடுத்த போட்டியில் நேபாள மகளிர் அணியை வெற்றி பெறுவது கட்டாயமாகிவிட்டது.
மாலைத் தீவுகளை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர், இலங்கை இந்த ஆட்டத்தில் சிறந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது. இருந்தாலும், 7வது நிமிடத்தில் டெகி லாசோம் இலங்கை அணியின் மோசமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி, பூட்டானுக்கு முதல் கோல் அடித்தார்.
இந்த கோலுக்கு பின்னர் இலங்கை மகளிர் அணி சிறப்பாக விளையாடி, 23வது நிமிடத்தில் அணித்தலைவி துஷானி மதுஷிகா கோல் அடித்து இலங்கையின் கணக்கை சமநிலையில் கொண்டு வந்தார்.
ஆனால், 32வது நிமிடத்தில் டோர்ஜி எடூன் பூட்டானுக்கு மீண்டும் கோலை அடித்து அவ்வணியை முன்னிலை பெற வைத்தார்.
- இமேஷாவின் கோல் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற இலங்கை
- நட்புரீதியான போட்டிக்கு தயாராகும் இலங்கை கால்பந்து அணி
இரண்டாம் பாதியில் இலங்கை அணி சிறப்பாக விளையாட எத்தனித்த போதிலும், பூட்டானின் அபார தடுப்பாட்டம் மூலம் கோலடிக்க முடியவில்லை. ஆனால் பூட்டான் மகளிர் அணி இரண்டாம் பாதியில் மேலும் இரண்டு கோல்கள் அடித்து 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் போட்டியை முடித்தது.
நேபாளத்தை எதிர்கொள்ளும் அடுத்த ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணியிடத்தில் நல்ல முன்னேற்றம் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம் : பூட்டான் 4-1 இலங்கை
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<