வளர்ந்துவரும் ஆசியக் கிண்ண போட்டி அட்டவணை

ACC Men’s Emerging Teams Asia Cup 2023

402

இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வளர்ந்துவரும் ஆடவர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.  

எட்டு அணிகள் பங்குபற்றும் 5ஆவது வளர்ந்துவரும் ஆடவர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்மாதம் 13ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது 

இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரின் குழு A இல் இலங்கை A, பங்களாதேஷ் A, ஆப்கானிஸ்தான் A மற்றும் ஓமான் A ஆகிய அணிகளும் குழு B இல் இந்தியா A, பாகிஸ்தான் A, ஐக்கிய அரபு இராச்சியம் A மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.   

இந்த நிலையில், ஏதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள வளர்ந்துவரும் ஆடவர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளன 

இம்முறை தொடரில் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளை தலா ஒவ்வொரு முறை எதிர்கொள்ளவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெறும். இதில் ஜூலை 21ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும், ஜூலை 23ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறும். 

இதன்படி, ஜூலை 21ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப்போட்டி காலை 10.00 மணிக்கு கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது அரையிறுதிப் போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து இறுதிப்போட்டி 23ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டிக்கு மேலதிக நாளொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இம்முறை வளர்ந்துவரும் ஆடவர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வரவேற்பு நாடான இலங்கை A அணியும், பங்களாதேஷ் A அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது.   

அதனைத் தொடர்ந்து ஜூலை 15ஆம் திகதி ஆப்கானிஸ்தான் A அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள இலங்கை A அணி, கடைசி லீக் போட்டியில் ஓமான் A அணியை எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி சந்திக்கவுள்ளது 

அதேநேரம், இந்தியா Aபாகிஸ்தான் A அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூலை 19ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற வளர்ந்துவரும் ஆடவர் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<