SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை இறுதி குழாம் அறிவிப்பு

SAFF Championship

521

மாலைதீவுகளில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (27) வெளியிடப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகான் தொடருக்கான போட்டிகளை முடித்த இலங்கை அணிக்கு, அடுத்த முக்கிய தொடராக இந்த SAFF சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது. இத்தொடர் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 16ஆம் திகதி வரை மாலைதீவுகளின் தேசிய கால்பந்து அரங்கத்தில் இடம்பெற உள்ளது.

இந்த தொடருக்கான ஆரம்ப கட்ட குழாம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு, குறித்த வீரர்கள் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் தமது பயிற்சிகளையும் ஆரம்பித்தனர்.

ஆரம்ப கட்ட குழாத்தில் உள்வாங்கப்பட்டு பயிற்சிகளுக்கு உள்நுழையும்போது மேற்கொண்ட முதலாவது PCR பரிசோதனையின்போது ஷதுரங்க மதுஷான், அப்துல் பாசித் மற்றும் அசேல மதுஷான் ஆகியோர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமையினால், அவர்கள் குழாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களுக்குப் பதிலாக ஏற்கனவே தேசிய அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட எடிசன் பிகுராடோ மற்றும் திலிப் பீரிஸ் ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டனர். எனினும், அதில் திலிப் பீரிஸ் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதிக் குழாமில் உள்வாங்கப்படவில்லை.

ஆரம்ப கட்ட குழாத்தில் பெயரிடப்பட்ட வீரர்கள் கொழும்பில் உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர் மேலதிக பயிற்சிகளுக்காக கடந்த 19ஆம் திகதி சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்காக சென்றனர்.

இந்த பயணத்தில் மேற்கொண்ட விஷேட பயிற்சிகள் மற்றும் அந்நாட்டின் ஜுப்பா கால்பந்து கழத்துடனான பயிற்சி ஆட்டம் என்பவற்றின் நிறைவில் தற்போது SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை இறுதி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்ட குழாத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்த கோல் காப்பாளர்களில் இளம் வீரர் நுவன் கிம்ஹான மற்றும் தனுஷ்க ராஜபக்ஷ ஆகிய இருவரும் குழாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சுஜான் பெரேராவுடன் கவீஷ் பெர்னாண்டோ மற்றும் நுவன் அருனசிறி ஆகியோர் இறுதி 3 கோல் காப்பாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, மொஹமட் ஹஸ்மீர் (சீ ஹோக்ஸ்), அபீல் மொஹமட் (கொழும்பு) மற்றும் டிலிப் பீரிஸ் (ரினௌன்) ஆகியோரும் இறுதி குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, அப் கண்ட்ரி லயன்ஸ் அணி வீரர் மொஹமட் சிபான் தேசிய அணிக்காக முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை 23 வயதின்கீழ் தேசிய அணிக்காக விளையாடியுள்ளார்.

அதேபோன்று, நீண்ட காலம் தேசிய அணிக்கு விளையாடிய அனுபவம் கொண்ட எடிசன் பிகுராடோவும் ஒரு பெரிய இடைவெளியின் பின்னர் SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமையினால், மீண்டும் தேசிய அணியில் இடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கை ஆரம்ப குழாம் 

சுஜான் பெரேரா (அப் கண்ட்ரி லயன்ஸ்), பிரபாத் றுவன் அருனசிறி (புளூ ஈகல்ஸ்), ரொஷான் அப்புஹாமி (டிபெண்டர்ஸ்), ஹர்ஷ பெர்னாண்டோ (புளூ ஈகல்ஸ்), ஷமோத் டில்ஷான் (கொழும்பு), ஷரித்த ரத்னாயக்க (கொழும்பு), டக்சன் பியுஸ்லஸ் (TC வி.க), மார்வின் ஹமில்டன் (பேர்கர்ஸ் ஹில் டவுன்), ஷலன சமீர (கொழும்பு), ஜூட் சுபன் (ரினௌன்), மொஹமட் முஸ்தாக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் பசால் (புளூ ஸ்டார்), கவிந்து இஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), டிலன் டி சில்வா (குயின்ஸ் பார்க் ரேன்ஜர்ஸ்), வசீம் ராசிக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் ஆகிப் (கொழும்பு), அசிகுர் ரஹ்மான் (டிபெண்டர்ஸ்), சுபுன் தனன்ஜய (ரெட் ஸ்டார்ஸ்), ரிப்கான் மொஹமட் (டிபெண்டர்ஸ்), அமான் பைசர் (ரினௌன்), கவீஷ் பெர்னாண்டோ (புளூ ஸ்டார்), மொஹமட் சிபான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), எடிசன் பிகுராடோ

தொடர் அட்டவணை (இலங்கை நேரப்படி

ஒக்டோபர் 01, 2021 

  1. இலங்கைஎதிர் பங்களாதேஷ் – இரவு30 மணி
  2. நேபாளம்எதிர் மாலைதீவு – மாலை30 மணி

ஒக்டோபர் 04, 2021

  1. பங்களாதேஷ்எதிர் இந்தியா – மாலை 4.30 மணி
  2. இலங்கைஎதிர் நேபாளம் – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 07, 2021

  1. இந்தியா எதிர் இலங்கை – மாலை 4.30 மணி
  2. மாலைதீவு எதிர் பங்களாதேஷ் – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 10, 2021 

  1. மாலைதீவு எதிர் இலங்கை – மாலை 4.30 மணி
  2. நேபாளம்எதிர் இந்தியா – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 13, 2021

  1. பங்களாதேஷ் எதிர் நேபாளம் – மாலை 4.30 மணி
  2. இந்தியா எதிர் மாலைதீவு – இரவு 9.30 மணி

ஒக்டோபர் 16, 2021

  • இறுதிப் போட்டி – இரவு 8.30 மணி 

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<

Sri Lanka squad for SAFF Championship 2021