பங்களாதேஷுக்கு எதிரான முதல் போட்டியிலிருந்து டெய்லர் நீக்கம்

Bangladesh tour of New Zealand 2021

140

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொஸ் டெய்லருக்கு ஏற்பட்டுள்ள சிறிய தசைப்பிடிப்பு உபாதை காரணமாக அவர் முதல் போட்டிக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக சகலதுறை வீரர் மார்க் செப்மன் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். 

இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் ஏன் இரண்டாமிடம்?

ப்ளங்கட் ஷீல்ட் தொடரில் சென்ட்ரல் ஸ்டேஜ் மற்றும் வெலிங்டன் பையர்பேர்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ரொஸ் டெய்லர் உபாதைக்கு முகங்கொடுத்தார். இவர், அணியுடன் தற்போது இணைந்திருக்கும் நிலையில், உபாதைக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரொஸ் டெய்லர் முதல் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளுக்கான உடற்தகுதியை பெற்றுக்கொள்வார் என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“ரொஸ் டெய்லருக்கு, தொடரின் ஆரம்பத்தில் உபாதை ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இதுவொரு சிறிய உபாதை. எனவே, அவர் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டு, க்ரிஸ்ச்சேர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்கு தயாராகிவிடுவார் என நம்புகிறேன்” என்றார்.

“இந்த தருணத்தில் மார்க் செப்மன் அணியில் இணைந்துள்ளமை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக நடைபெற்ற T20i தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். எனவே, அவரால் மேலும் சிறப்பாக செயற்படமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என கெரி ஸ்டீட் சுட்டிக்காட்டினார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து உபாதை காரணமாக, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார். தற்போது, ரொஸ் டெய்லர் முதல் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் தலைவராக டொம் லேத்தம் செயற்படவுள்ளார். 

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க>>