துடுப்பாட்டத்தில் அபாரம் காண்பித்த யாழ். மத்தி ; போராடி வென்றது இந்துக் கல்லூரி

U19 Schools Cricket 2022

647

இலங்கை பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான டிவிஷன் 3 போட்டிகளில் இன்றைய தினம் (09) யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகள் வெற்றிகளை பதிவுசெய்திருந்தன.

கொவிட்-19 தொற்று காரணமாக அணிக்கு தலா 50 ஓவர்கள் போட்டிகளாக நடத்தப்படும் இந்த பருவகாலத்துக்கான போட்டித்தொடரில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி அணியினர் அற்புதமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பதிவுசெய்துக்கொண்டதுடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியினர் புனித பத்திரிசியார் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.

>> அநுராதபுர மத்திய கல்லூரியை வீழ்த்திய சென். ஜோன்ஸ் அணி

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி எதிர் ஸ்கந்தவரோதயக் கல்லூரி

ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் மிகச்சிறப்பான பிரகாசிப்பு மற்றும் ரஞ்சித்குமார் நியூட்டனின் சகலதுறை பிரகாசிப்பு என்பவற்றின் உதவியுடன் யாழ். மத்தியக் கல்லூரி அணி 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியக் கல்லூரி அணிசார்பாக மூன்றாமிலக்க வீரர் நியூட்டன் 89 ஓட்டங்களை விளாசி நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க, மத்தியவரிசையில் ஆடிய ஸ்ரீதரன் சாரங்கன் 99 பந்துகளில் 109 ஓட்டங்களை விளாசி சதம் கடந்தார்.

இவர்களின் இந்த ஆரம்பங்களை சரியாக பயன்படுத்திக்கொண்ட நிசாந்தன் அஜய், 4 சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்திய கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 359 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

பின்னர் களமிறங்கிய ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியதில், துடுப்பாட்ட வீரர்கள் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டனர். மத்திய கல்லூரி அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் கொடுத்த நியூட்டன் பந்துவீச்சிலும் எதிரணிக்கு சவால் கொடுத்தார்.

எனவே, ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. ஸ்கந்தவரோதயக் கல்லூரி சார்பாக எஸ்.அனுசாந்த் 16 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றுக்கொள்ள, மத்தியக் கல்லூரி சார்பாக நியூட்டன் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி சுருக்கம் 

  • யாழ்.மத்தியக் கல்லூரி – 359/9 (50), சாரங்கன் 109, நியூட்டன் 89, அஜய் 52, ஜே.கேதுஷன் 59/3 
  • ஸ்கந்தவரோதய கல்லூரி – 108/10 (39.3), எஸ்.அனுசாந்த் 16, நியூட்டன் 22/4 
  • முடிவு – யாழ்.மத்தியக் கல்லூரி 248 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் புனித பத்திரிசியார் கல்லூரி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டி குறைந்த ஓட்டங்களை கொண்ட போட்டியாக இருந்தாலும், இறுதிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தியதொரு போட்டியாக அமைந்திருந்தது.

போட்டியில் இந்துக் கல்லூரி அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 41.3 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 112 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இந்துக் கல்லூரி அணியை பொருத்தவரை எஸ். சுபர்ணன் சிறப்பாக பந்துவீசி 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பி. மதுசன் புனித பத்திரிசியார் அணிக்கு 20 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இதில், இந்துக் கல்லூரி அணி 24 ஓட்டங்களை மேலதிக ஓட்டங்களாக வழங்கியிருந்தது.

ஒருநாள் போட்டிகளில் இதுபோன்ற வெற்றியிலக்கு இலகுவானதாக இருந்தாலும், பத்திரிசியார் கல்லூரி அணி போட்டியை இலகுவாக விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ச்சியாக இந்துக் கல்லூரி அணியின் விக்கெட்டுகளை சாய்த்த பத்திரிசியார் அணி கடுமையான சவாலை கொடுத்தது.

ஒரு கட்டத்தில் இந்துக் கல்லூரி அணி 58 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெற்றி பத்திரிசியார் கல்லூரி பக்கம் திரும்பிய போதும், இந்துக் கல்லூரி அணியின் தலைவர் டி.கஜனாத் மற்றும் எல். பிரியந்தன் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தலா 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 44.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் மீதமிருக்க இந்துக் கல்லூரி அணி வெற்றியை தமதாக்கிக்கொண்டது. பத்திரிசியார் கல்லூரி சார்பாக மயூரன் சௌத்ஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி சுருக்கம் 

  • புனித பத்திரிசியார் கல்லூரி- 112/10 (41.3), பி.மதுசன் 20, எஸ். சுபர்ணன் 26/5 
  • யாழ். இந்துக் கல்லூரி- 113/7 (44.3), டி.கஜனாத் 28*, எல்.பிரியந்தன் 28*, மயூரன் சௌத்ஜன் 48/3 
  • முடிவு – யாழ்.இந்துக் கல்லூரி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<