துர்க்மெனிஸ்தானின் கரப்பந்து அணியை வீழ்த்திய இலங்கை விமானப்படை

10
Image Courtesy - asianvolleyball.net

சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய கழக கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் குழுநிலை போட்டியொன்றில் இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்து அணி, துர்க்மெனிஸ்தானின் பினாகர் (Binagar) அணியினை வீழ்த்தியுள்ளது.

ஆசிய கழக கரப்பந்தாட்டத் தொடரில் இலங்கைக்கு ஐந்தாவது இடம்

சீனா – தாய்ப்பேயில் நடைபெற்று வருகின்ற கழகங்களுக்கிடையிலான ஆசியக் கிண்ண கரப்பந்தாட்டத்…

முன்னதாக இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்து அணி, 2018ஆம் ஆண்டிற்கான மஞ்சி தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் சீனாவில் இடம்பெறும் இந்த ஆண்டுக்கான மகளிர் ஆசிய கழக கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றிருந்தது.

இந்த கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கடந்த ஆண்டு இலங்கை சிங்கங்கள் (Lanka Lions) என்ற பெயரில் பங்குபற்றிய இலங்கையின் தேசிய மகளிர் வலைப்பந்து அணி 9ஆவது இடத்தினைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இலங்கை விமானப்படை மகளிர் கரப்பந்து அணி, பினாகர் கரப்பந்து அணியினை தோற்கடித்த போட்டி இந்த கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் குழு B அணிகளின் மோதலாக அமைந்திருந்தது.

பினாகர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் செட்டினை இலங்கை விமானப்படை அணி 25-13 என்கிற புள்ளிகள் கணக்கில் இலகுவாகக் கைப்பற்றியது. பின்னர், இரண்டாம் செட்டினை 25-22 என்கிற புள்ளிகள் கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை விமானப்படை அணி, மூன்றாம் செட்டினையும் 25-15 என்கிற புள்ளிகள் கணக்கில் இலகுவாக தம்வசமாக்கி பினாகர் அணிக்கு எதிரான போட்டியில் 3-0 என வெற்றியினை பதிவு செய்து கொண்டது.

இப்போட்டியில் இலங்கை விமானப்படை அணியின் வெற்றிக்கு தினேஷா பிரசாதினி மற்றும் சத்தூரிக்க ரணசிங்க ஆகியோர் தலா 12 புள்ளிகள் வீதம் பெற்றுக்கொடுத்து உதவி செய்திருந்தனர்.

பெண்களுக்கான மரதனில் புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி

இப்போதைய நாட்களில் இலங்கையினை சேர்ந்த தடகள வீர, வீராங்கனை கள் சர்வதேச அரங்கில் தங்களது…

இந்த ஆண்டுக்கான மகளிர் ஆசிய கழக கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் குழு B அணிகளில் இலங்கை விமானப்படை, பினாகர் அணிகளோடு சேர்த்து ஜப்பானின் ஹிசமிட்சு ஸ்பிரிங்ஸ் அணியும், தாய்லாந்தின் சுப்ரீம் சொன் பேரி.ஈ.டெக் அணியும், வியாட்நாமின் பின் டைன் லொங் அணியும், வடகொரியாவின் ஏப்ரல் 25 விளையாட்டு கழக அணியும் போட்டியிடுகின்றன.

இதேவேளை, இத்தொடரில் குழு A அணிகளாக கஸகஸ்தானின் ஏல்டாய் AC, சீனாவின் டியான்ஜின் போகைபேங்,  சைனீஸ் தாய்பேய் மற்றும் ஹொங்கொங் ஆகியவை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பினாகர் அணியுடனான போட்டிக்கு முன்னதாக இலங்கை விமானப்படை அணி ஜப்பானின் ஹிசமிட்சு ஸ்பிரிங்ஸ் அணியுடனான போட்டியில் 25-10, 25-7, 25-7 என மூன்று சுற்றுக்களையும் பறிகொடுத்து 3-0 என தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க