IPL இல் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா

Indian Premier League 2023

100

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் 6,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை தொட்ட நான்காவது வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

IPL தொடரில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை  இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் கிரீனின் சகலதுறை ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியில் 28 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் IPL கிரிக்கெட் தொடரில் 6,000 ஓட்டங்களைக் கடந்த 4ஆவது வீரர் எனும் புதிய மைல்கல்லை ரோஹித் சர்மா எட்டியுள்ளார்.

இதற்கு முன் விராத் கோஹ்லி, ஷிகர் தவான் மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய மூவரும் 6,000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இதன்படி, விராட் கோஹ்லி 6,844 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவான் 6,477 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும், டேவிட் வோர்னர் 6,109 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் நான்காவது வீரராக ரோஹித் சர்மாவும் இடம்பிடித்துள்ளார்.

ரோஹித் சர்மா இதுவரை 232 போட்டிகளில் விளையாடி 6,014 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 41 அரைச் சதங்களும் அடங்கும்.

இதற்கிடையே, இந்திய வீரர்களில் குறைந்த பந்துகளில் 6,000 IPL ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்துள்ளார். அவர் 4,616 பந்துகளில் 6,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார். அதேநேரத்தில் விராத் கோஹ்லி 4,595 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்.

முன்னதாக, நடப்பு IPL தொடரில் ரோஹித் சர்மா T20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரராகவும் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<