மாலிங்கவிற்கு நன்றி தெரிவித்த குட்டி மாலிங்க

925

சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 24ஆவது போட்டி திங்கட்கிழமை (17) பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நிறைவுக்கு வந்ததோடு, திரில்லராக நடைபெற்ற குறித்த போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ் அணி 8 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.

இறுதி ஓவரில் மதீஷவை நம்பிய டோனி; சென்னைக்கு வெற்றி

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு இலங்கையின் குட்டி மாலிங்க என அழைக்கப்படும் மதீஷ பத்திரனவின் பந்துவீச்சும் பிரதான காரணமாகும். சென்னை சுபர் கிங்ஸ் அணித்தலைவர் MS. டோனி மூலம் அழைக்கப்பட்டு போட்டியின் இறுதி நேரத்தில் முக்கிய இரண்டு ஓவர்களை வீசிய மதீஷ, குறித்த இரண்டு ஓவர்களிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இதில் குறிப்பாக போட்டியின் இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில், இறுதி ஓவரினை வீசிய மதீஷ பத்திரன 10 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்திருந்தார்.

மதீஷ பத்திரன வீசியிருந்த கச்சிதமான யோக்கர் பந்துகள் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு டு பிளேசிஸ் மற்றும் கிளன் மெக்ஸ்வெல் ஆகியோரின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த சிறந்த துடுப்பாட்ட அடித்தளத்தினை அப்படியே முழுமையாக இல்லாமல் செய்ததோடு, அவ்வணியின் வெற்றி வாய்ப்பையினையும் பறித்திருந்தது.

இந்த நிலையில் மதீஷ பத்திரனவின் பந்துவீச்சினை சமூக வலைதளமான டுவிட்டரில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக குட்டி மாலிங்க, லசித் மாலிங்கவிடம் இருந்தும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கின்றார்.

மதீஷவின் பந்துவீச்சினை லசித் மாலிங்க பாராட்டி இருந்ததோடு, அவர் அழுத்தங்களை கையாண்ட விதத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மாலிங்கவின் வாழ்த்துப் பதிவிற்கும், மாலிங்கவின் ஒத்துழைப்புகளுக்கும் மதீஷ பத்திரன நன்றிகளை தெரிவித்ததோடு, மாலிங்கவின் ஆதரவு தனக்கு எப்போதும் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் நட்சத்திரமும் அணியின் முன்னாள் தலைவியுமான மித்தாலி ராஜ், 20 வயது நிரம்பிய குட்டி மாலிங்காவினை பாராட்டியதோடு, சென்னை சுபர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் ஜாம்பவானும், கிரிக்கெட் போட்டி வர்ணனையாளர்களில் ஒருவராக இருக்கும் இயன் பிஷோப், மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சுபர் கிங்ஸ் அணியானது தமது இளம் பந்துவீச்சாளர்களை கையாளும் விதம் தொடர்பில் பாராட்டியிருந்ததோடு, அவ்வாறு கையாளப்பட்ட வீரர்களில் ஒருவராக மதீஷ பத்திரன இருப்பதில் சந்தோசம் அடைவதாக தெரிவித்திருந்தார்.

IPL போட்டிகளில் வர்ணனையாளர்களாக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான், இந்திய தொலைக்காட்சி வர்ணனையார் ஹார்ஷா போக்லே போன்ற வீரர்களும், மதீஷ பத்திரனவின் பந்துவீச்சினை பாராட்டியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மிகவும் பலமான நிலைக்குச் சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான வெற்றியுடன் இந்த ஆண்டுக்கான IPL தொடரில் தம்முடைய மூன்றாவது வெற்றியினைப் பதிவு செய்திருக்கும் சென்னை சுபர் கிங்ஸ் அணி தமது அடுத்த மோதலில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<