பந்துகளில் எச்சிலிடுவதை தடைசெய்ய தயாராகும் ஐசிசி!

64

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ளேவின் தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் குழு, கொவிட்-19 வைரஸ் காரணமாக போட்டியின் போது பந்தினை பயன்படுத்தும் விதம் மற்றும் பொது நாடுகளை அற்ற நடுவர்களை நியமிப்பது தொடர்பிலான ஆலோசனைகளை, ஐசிசி தலைமை நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்

ஐசிசி தலைமை நிர்வாகக்குழுவின் சந்திப்பு எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதன்போது, இந்த ஆலோசனைகளுக்கு அனுமதி பெறவிருப்பதாக ஐசிசி கிரிக்கெட் குழு அறிவித்துள்ளது.

போட்டிக்கான பந்து

ஐசிசி வைத்திய ஆலோசனை குழுவின் தலைவர் வைத்தியர் பீட்டர் ஹெர்கோர்டின், பந்தை புதிதாக்குவதற்காக எச்சிலிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், இந்த ஆலோசனையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை ஐசிசி கிரிக்கெட் குழு மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது, பந்தை புதிதாக்குவதற்காக எச்சிலிடுவதை தடைசெய்ய வேண்டும் என்ற ஆலோசனையை ஐசிசி கிரிக்கெட் குழு முன்வைக்கவுள்ளது.

அதேநேரம், ஐசிசி கிரிக்கெட் குழு, எச்சில் மூலம் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், வியர்வை மூலமாக வைரஸ் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என ஐசிசி வைத்திய ஆலோசனை சுட்டிக்காட்டியுள்ளதுடன், அதன்மூலம் பந்தினை பிரகாசிக்க வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், மேம்பட்ட சுகாதார நடவடிக்கைகள் விளையாட்டு மைதானத்திலும் அதைச் சுற்றியும் செயல்படுத்தவும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொது நாடுகளை அற்ற நடுவர்களை நியமித்தல் (நடுநிலை நடுவர்கள்)

சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில், சொந்த அணிகள் விளையாடும் போது, அந்த நாட்டின் நடுவர்களை நியமிப்பதை கடந்த 2002ம் ஆண்டு முதல் ஐசிசி தவிர்த்து வருகின்றது.

எனினும், இப்போதைய நிலையில், சர்வதேச பயணத்தடைகள், மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகள், தனிமைப்படுத்தல் காலம் என இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு தற்காலிகமாக போட்டிகள் நடத்தும் நாடுகளிலிருந்து, நடுவர்களை தெரிவுசெய்ய வேண்டும் என்ற ஆலோசனையையும் ஐசிசி கிரிக்கெட் குழு முன்வைக்கவுள்ளது.

அதன்படி, ஐசிசியின் நடுவர்கள் பட்டியலில் உள்ள உள்நாட்டு நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்கள் போட்டிகளுக்காக ஐசிசியின் மூலம் நேரடியாக நியமிக்கப்படுவர். போட்டி நடக்கும் நாட்டில், ஐசிசியின் நடுவர்கள் பட்டியல் மற்றும் மத்தியஸ்தர்கள் பட்டியலில் எவரும் இடம்பெற்றிருக்காவிட்டால், அந்த நாட்டில் உள்ள சிறந்த நடுவர்கள் மற்றும் போட்டி மத்தியஸ்தர்களை ஐசிசி நியமிக்கும்.

இதேவேளை, குறித்த பரந்துப்பட்ட நியமனங்களை வழங்குவதற்கு, தொழிநுட்பத்தை பயன்படுத்த முடியும் என கிரிக்கெட் குழு ஆலோசனை வழங்கியுள்ளதுடன், தற்காலிகமாக ஒவ்வொரு அணிக்கும் மேலதிகமாக ஒரு DRS வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ஐசிசி கிரிக்கெட் குழு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவர் அனில் கும்ளே தெரிவிக்கையில், “நாம் இப்போது ஒரு அசாதாரண சூழ்நிலையில் வாழ்கிறோம்.  எமது பாதுகாப்பை கவனத்திற்கொண்டு இதுபோன்ற அலோசனைகளை இன்று முன்வைத்திருக்கிறோம். கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைவரையும் பாதுகாப்பதற்காகவே இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<