கெமரூன் கிரீனின் அதிரடியில் மும்பைக்கு ஹெட்ரிக் வெற்றி

86

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது. இதன்மூலம் மும்பை அணி இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

IPL கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சொந்த மைதான தரப்பு முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இஷான் கிஷன், ரோஹித் சர்மா களமிறங்கினர். சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களை எடுத்த நிலையில் ரோஹித் சர்மா 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷன் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டங்களுடனும் வெளியேறினர். பின்பு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கெமரூன் கிரீன் ஆகிய இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

இதில் திலக் வர்மா 17 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கெமரூன் கிரீன் அரைச் சதம் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைக் குவித்தது.

சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்ட கெமரூன் கிரீன் 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். ஹைதராபாத் தரப்பில் மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை துரத்தி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஹெரி ப்ரூக் (9), ராகுல் திரிபதி (7), எய்டன் மார்க்ரம் (22) மற்றும் அபிசேக் ஷர்மா (1) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன், ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். அதில் அதிரடியில் மிரட்டிய கிளாசன் 36 (16) ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா, மெரிடித் மற்றும் பெஹண்ட்ரூஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இறுதி ஓவரை வீசிய இளம் வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி தனது முதல் IPL விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி இம்முறை IPL தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியையும் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணி – 192/5 (20) – கெமரூன் கிரீன் 64, இஷான் கிஷன் 38, மார்கோ ஜென்சன் 2/43

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – 178 (19.5) – மயங் அகர்வால் 48, ஹென்ரிச் கிளாசன் 36, ரிலி மெரிடித் 2/33

முடிவுமும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<