இந்திய ஒருநாள் அணியின் தலைவராகும் ரோஹித் சர்மா

143
Getty Image

இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, 2022 ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஒருநாள் அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக பொறுப்பேற்பார் என்று பிசிசிஐ இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அஜிங்கியா ரஹானேவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணங்களை இந்திய அணி கைப்பற்றத் தவறியது.

இதனால் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோஹ்லி, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு T20 தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய T20 அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார்

இதனிடையே, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையிலும், வலுவான இந்திய அணியை உருவாக்கும் வண்ணம் தற்போது ஒருநாள் தலைவர் பதவியில் இருந்தும் விராட் கோஹ்லி விடைபெற்றுள்ளார், இதனால் அவருக்குப் பதில் உப தலைவராக இருந்த ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் புதிய தவைராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரியில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இந்திய அணியின் தலைவராக ரோஹித் சர்மா செயற்படவுள்ளார்.

இது இவ்வாறிருக்க, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகரமான தலைவராக வலம் வருகின்ற விராட் கோஹ்லி இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்து செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய டெஸ்ட் அணியின் உப தலைவராக உள்ள அஜிங்கியா ரஹானே பிரகாசிக்கத் தவறிய காரணத்தாலும், காயத்தால் அவதிப்படுவதாலும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் உப தலைவராக ரோஹித் சர்மாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய குழாத்தில் இருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹர் போன்ற முக்கிய வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அண்மையில் நிறைவுக்கு வந்த நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறாத ஜஸ்பிரித் பும்ரா, மொஹமட் ஷமி, ஹனுமா விஹாரி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (தலைவர்), ரோஹித் சர்மா (உப தலைவர்), கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், மொஹமட் சிராஜ்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<