T20I தரவரிசையில் கோஹ்லி, ரோஹித்தை பின்தள்ளிய பெதும் நிஸ்ஸங்க

ICC T20I Rankings

1719

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய T20I தரவரிசையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோஹ்லியை பின்தள்ளி, இலங்கை வீரர் பெதும் நிஸ்ஸங்க 9வது இடத்தை பிடித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து, ஐசிசி புதிய T20I வீரர்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது.

>>கோஹ்லியின் 100ஆவது டெஸ்ட்: பார்வையாளர்களுக்கு அனுமதி!

அதன்படி, இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது T20I போட்டியில் 75 ஓட்டங்களை விளாசிய பெதும் நிஸ்ஸங்க 15வது இடத்திலிருந்து 6 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார். இதில், விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு எதிரான T20I தொடரை விளையாடாததன் காரணமாக 5 இடங்கள் பின்தள்ளப்பட்டு, 15வது இடத்தை பிடித்துள்ளார்.

அதேநேரம் இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அணித்தலைவர் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 13வது இடத்தையும், கே.எல்.ராஹுல் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 10வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் முறையே 47, 74 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இவர், 18 இடங்கள் முன்னேறி 46வது இடத்தை பிடித்துள்ளதுடன், சரித் அசலங்க 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு 41வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணியை பொருத்தவரை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் அரைச்சதம் கடந்து 204 ஓட்டங்களை குவித்த ஸ்ரேயாஷ் ஐயர் 27 இடங்கள் முன்னேறி 18வது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 3 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

கொவிட்-19 காரணமாக இந்திய அணிக்கு எதிரான தொடரை தவறவிட்ட வனிந்து ஹஸரங்க பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 6வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் 10வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

ஐசிசியின் தற்போதைய T20I தரவரிசையின் அடிப்படையில் துடுப்பாட்ட  வீரர்கள் தரவரிசையில் பாபர் அஷாம், பந்துவீச்சாளர் வரிசையில் டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் சகலதுறை வீரர்கள் பட்டியலில் மொஹமட் நபி ஆகியோர் முதலிடங்களை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<