சென்னை இரசிகர்களுக்கு ஏமாற்றம்: IPL இறுதிப் போட்டி இடமாற்றம்

117
Image - DNA India

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டிக்கான வருமானத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இழக்க நேரிட்டதன் காரணமாக குறித்த போட்டி சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

12ஆவது பருவகாலத்திற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது தற்சமயம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேற்பட்ட போட்டிகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளன.

IPL இறுதிப் போட்டியை நடத்துவதற்கான தகுதியை இழக்குமா சென்னை?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில்…..

குறித்த தொடருக்கான 56 லீக் போட்டிகளினதும் அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற காரணத்தினால் அதற்கு ஏற்றவாறு நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் செயற்பட வேண்டுமென்பதனால் தகுதிகாண் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தகுதிகாண் போட்டிகளுடன் சேர்த்து இறுதிப் போட்டிக்கான திகதி மற்றும் மைதானங்கள் ஆகியவை இன்று (22) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்டது.

முதலாவது தகுதிகாண் போட்டியானது மே மாதம் 7ஆம் திகதி சென்னையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘எலிமினேட்டர்போட்டியானது மே மாதம் 8ஆம் திகதியும், இரண்டாவது தகுதிகாண் போட்டியானது மே மாதம் 10ஆம் திகதியும் விசாகப்பட்டினத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியானது மே மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் அமைத்துள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இருந்தாலும் இந்த வருடத்திற்கான .பி.எல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறும் என்றே முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிப் போட்டிக்கான திகதி ஒன்றும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஏன் இறுதிப் போட்டி ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

IPL இறுதிப் போட்டியை நடத்துவதற்கான தகுதியை இழக்குமா சென்னை?

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில்…..

சென்னையில் சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம். சிதம்பரம் மைதானத்தில் , ஜே மற்றும் கே ஆகிய பார்வையாளர் அரங்குகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இறுதிப் போட்டியை கண்டுகழிப்பதற்கு அதிகளவிலான கிரிக்கெட் இரசிகர்கள் மைதானத்திற்கு வருவார்கள். இந்நிலையில் குறித்த மூன்று பார்வையாளர் அரங்குகளும் மூடப்பட்டிருப்பது சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு தடையாக அமைந்திருந்தது.

குறித்த மூன்று பார்வையாளர்கள் அரங்குகளிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்களுக்கான வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, குறித்த பார்வையாளர் அரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது அனுமதியை பெற தவறியதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது, இறுதிப் போட்டியில் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிட்ட நிலையிலே இறுதிப் போட்டியானது சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஏன் முதல் தகுதிகாண் போட்டி சென்னையிலேயே நடைபெறவுள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைமை செயல் அதிகாரியான வினோத் ராய் பதிலளிக்கையில், ‘சென்னை அணி கடந்த வருட சம்பியன் என்பதனால் முதல் தகுதிகாண் போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பன அவர்களின் சொந்த மைதானத்திற்கு வழங்கப்பட்டது. இருந்தாலும், இவ்வாறான ஒரு நிலையில் தற்போது சென்னை அணி முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.’

எனவே, இவ்வாறான நிலையில் இரண்டு போட்டிகளையும் அங்கிருந்து இடமாற்றுவது இக்கட்டனான நிலை என்பதை அறிந்தே முதல் தகுதிகாண் போட்டியை அங்கு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.’ என தெரிவித்தார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<