கிரிக்கெட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 24

1013
OTD-Sep-24

2007ஆம் ஆண்டுஇந்தியா டி20 சம்பியன்

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 1ஆவது உலகக்கிண்ணப் போட்டிகள் தென் ஆபிரிக்காவில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டதன் மூலமும் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 15 ஓட்டங்களால் வெற்றி கொண்டதன் மூலமும் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

அந்த அடிப்படையில் இந்தியபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 1ஆவது டி20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரில் அமைந்துள்ள நியூ வொண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானம் செய்தது. இதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீர் மிகச் சிறப்பாக ஆடி 54 பந்துகளில் 8 நேர்த்தியான பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 75 ஓட்டங்களையும், யூசுப் பதான் 15 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா இறுதி நேரத்தில் களமிறங்கி  16 பந்துகளில் 30 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் தரப்பில் பந்து வீச்சில் உமர் குல் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் முஹம்மத் ஆசிப் 25 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்கள்.

பின்பு 158 ஓட்டங்களைப் பெற்றால் டி20 உலகக் கிண்ணம் தம் வசம் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பம் முதல் குறித்த இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி ஒருநிலையில் 11.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது. ஆனால் ஒருமுனையில் இருந்து அபாரமாக ஆடிய மிஸ்பாஹ் உல் ஹக் போட்டியை பாகிஸ்தான் அணியின் பக்கம் சாய்த்தார். போட்டியின் 17ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங்கிற்கு 3 சிக்ஸர்களை விளாச போட்டி மேலும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. ஆனால் இந்திய அணியும் பதிலுக்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் போட்டி இருசாரார் பக்கமும் சமநிலையில் காணப்பட்டது. பின் இறுதியில், கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரின் 2ஆவது பந்தில் மிஸ்பா சிக்ஸர் விளாசினார். பின்னர் வெற்றி பெற  6 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மிஸ்பா பின் “Fine leg” திசையினுடாக அடிக்க முனைந்த போது பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் இந்திய அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று 1ஆவது டி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றது.

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 23

செப்டம்பர் மாதம் 24ஆம் திகதியில் பிறந்த கிரிக்கெட் வீரர்கள்

 • 1858ஆம் ஆண்டுஆலன் ஸ்டீல் (இங்கிலாந்து)
 • 1924ஆம் ஆண்டுசம்மி கைலின் (மேற்கிந்திய தீவுகள்)
 • 1946ஆம் ஆண்டுபெட் போகோக் (இங்கிலாந்து)
 • 1950ஆம் ஆண்டுமொகீந்தர் அமர்நாத் (இந்தியா)
 • 1953ஆம் ஆண்டுபர்வேஸ் மிர் (பாகிஸ்தான்)
 • 1955ஆம் ஆண்டுகிருஷ்ணா ஹரிஹரன் (இந்தியா)
 • 1966ஆம் ஆண்டுஅதுல் பெடேட் (இந்தியா)
 • 1968ஆம் ஆண்டுபோல் போலார்ட் (இங்கிலாந்து)
 • 1981ஆம் ஆண்டுதினிது மாரகே (இலங்கை)
 • 1985ஆம் ஆண்டுபிலால் ஆசிப் (பாகிஸ்தான்)
 • 1986ஆம் ஆண்டுகிறிஸ்டியன் ஜொங்கர் (தென் ஆபிரிக்கா)
 • 1986ஆம் ஆண்டுஷோன் பிட்ஸ் கிப்பன் (நியூசிலாந்து)
 • 1986ஆம் ஆண்டுடொட் எஸ்டல் (நியூசிலாந்து)
 • 1994ஆம் ஆண்டுஆரோன் நிக்கர் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்