சனத் ஜயசூரியவின் அதிரடி பந்துவீச்சுடன் இலங்கை லெஜன்ட்ஸ் வெற்றி

193

வீதிப் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட Road Safety World Series T20 தொடரில் செவ்வாய்க்கிழமை (13) இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணியினை எதிர்கொண்ட இலங்கை லெஜன்ட்ஸ் சனத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சோடு 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

லெஜன்ட்ஸ் தொடரில் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட இலங்கை

தமது முதல் போட்டியில் அவுஸ்திரேலிய லெஜன்ட்ஸ் அணியை தோற்கடித்த இலங்கை லெஜன்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜன்ட்ஸ் வீரர்களை எதிர்கொண்ட போட்டி கான்பூர் கீரின் பார்க் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணித்தலைவர் திலகரட்ன டில்சான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து அணிக்கு வழங்கினார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து லெஜன்ட்ஸ் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 78 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்தது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் இயன் பெல் பெற்ற 15 ஓட்டங்களே அவரது தரப்பில் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக அமைய, இலங்கை லெஜன்ட்ஸ் அணி பந்துவீச்சில் மிரட்டலான ஆட்டத்துடன் சனத் ஜயசூரிய வெறும் 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதேநேரம் நுவான் குலசேகர மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்யணயிக்கப்பட்ட 79 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி, போட்டியின் வெற்றி இலக்கை 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களுடன் அடைந்தது.

பாகிஸ்தானின் தோல்வியை பொறுப்பேற்ற சதாப் கான்

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் டில்சான்  முனவீர 2 பெளண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் எடுக்க, உபுல் தரங்க ஒரு சிக்ஸர் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 23 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் பந்துவீச்சில் ஸ்டீபன் பாரி, கிறிஸ் சோக்பீல்ட் மற்றும் டிமித்ரி மாஸ்கெரனாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை லெஜன்ட்ஸ் அணி தொடரில் இரண்டாவது வெற்றியினைப் பதிவு செய்து கொள்வதோடு, போட்டியின் ஆட்டநாயகனாக சனத் ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் – 78(19) இயன் பெல் 15(24), சனத் ஜயசூரிய 3/4(4), நுவான் குலசேகர 11/2(3), சத்துரங்க டி சில்வா 17/2(3)

இங்கிலாந்து லெஜன்ட்ஸ் – 79/3(14.3) டில்சான் முனவீர 24(43), உபுல் தரங்க 23(19), ஸ்டீபன் பாரி 9/1(4)

முடிவு – இலங்கை லெஜன்ட்ஸ் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<