சிம்பாவே, ஹராரேயில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றதோடு போனஸ் புள்ளியுடன் மொத்தமாக 5 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

இரண்டாவது முறையாகவும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார். எவ்விதமான மாற்றங்களுமின்றி ஜிம்பாப்வே உடனான போட்டியில் வெற்றி பெற்றிருந்த அதே அணி இம்முறையும் களமிறங்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் குழாமில் மூன்று அறிமுக வீரர்கள் இப்போட்டிக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையாவிட்டாலும், இன்றைய போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாய் ஹோப் 47 ஓட்டங்களையும், ரோமன் பவல் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

அத்துடன், இடது கை துடுப்பாட்ட வீரர் ஜொனதன் கார்ட்டர் அபாரமாக துடுப்பாடி 62 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 54 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார். 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி 227 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

228 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனஞ்சயன டி சில்வா நான்காவது ஓவரில் ஜேசன் ஹோல்டரின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் ஷாய் ஹோப்பிடம் பிடி கொடுத்து 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்களான சசித் பத்திரன மற்றும் ஷெஹான் ஜெயசூரிய எழாவது விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற போதிலும் இலங்கை அணியின் வெற்றிக்கு அது சாதகமாக அமையவில்லை. அத்துடன் இலங்கை அணி வெறும் 79 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்டுகளையும் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் இலங்கை அணி 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அறிமுக வீரர் ஆஷ்லி நர்ஸ் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர்களை வீழ்த்தினார். அதே நேரம் ஜேசன் ஹோல்டர் 8 ஓவர்களுக்கு வெறும் 16 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஜேசன் ஹோல்டர் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் அணி : 227 (49.2) – ஜொனதன் கார்ட்டர் 54(62), ஷாய் ஹோப் 47(81), ரோமன் பவல் 44(29), எவின் லூயிஸ் 27(50), நுவன் குலசேகர 37/2(1௦), சுரங்க லக்மால் 45/2(9.2), நுவான் பிரதீப் 55/2(1௦), சசித் பத்திரன 25/1(6), அசேல குணரத்ன 4௦/1(1௦)

இலங்கை அணி : 165(43.1) – சசித் பத்திரன 45(4௦), ஷெஹான் ஜயசூரிய 31(59), நிரோஷன் திக்கெல்ல 28(45), அசேல குணரத்ன 18(25), நுவன் குலசேகர 16(13), ஷானோன் கேப்ரியல் 31/3(8.1), ஆஷ்லி நர்ஸ் 46/3(1௦), ஜேசன் ஹோல்டர் 16/2(8), கார்லோஸ் பிராத்வெய்ட் 34/1(9)

மும்முனைப் போட்டியின் மூன்றாவது போட்டி நவம்பர் மாதம் 19ஆம் திகதி, மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.