டயலொக் ரக்பி லீக் இரண்டாம் சுற்றில் இன்று(30) நடைபெற்ற போட்டியொன்றில் பொலிஸ் அணியை 41 – 28 என்ற புள்ளிகள் அடிப்படையில் கடற்படை அணி வெற்றிபெற்றது.

வெளிசரை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை  வெளிப்படுத்தி பொலிஸ் அணியை வென்றதன் மூலம், சம்பியன் மகுடத்திற்கான தமது கனவை கடற்படை அணி தக்கவைத்துக்கொண்டது.

கடற்படை அணியின் நட்சத்திர வீரர்களான லீ கீகள் மற்றும் புத்திம பிரியரத்ன ஆகியோர் காயம் காரணாமாக இப்போட்டியில் விளையாடவில்லை. அவர்களின் இடத்தில் கோசல திசேர மற்றும் தினுஷ பெர்னாண்டோ ஆகியோர் விளையாடினர். பொலிஸ் அணியில் மூஷீன் பளீல் காயம் காரணமாக விளையாடவில்லை.

போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய பொலிஸ் அணியே முதலில் புள்ளிகளை பெற்றுக்கொண்டது. ரதீஷ செனவிரத்ன 3ஆவது நிமிடத்தில் ரோலிங் மோல் மூலமாக பொலிஸ் அணியின் முதல் ட்ரையை வைத்தார். எனினும் ராஜித சன்சோனி உதையை தவறவிட்டார். (பொலிஸ் 05 – கடற்படை 00)

பலம் மிக்க கடற்படை அணியானது தாமதம் இன்றி பொலிஸ் அணியின் தடுப்பை தாண்டி சென்று முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. விங் நிலை வீரர் சாலிய ஹந்தபாங்கொட உதைத்த பந்தின் மூலம் செயற்பட்ட கடற்படை அணியானது தினுஷ பெர்னாண்டோ மூலமாக கம்பங்களின் அடியில் தமது முதல் ட்ரையை வைத்தது. திலின வீரசிங்க இலகுவான உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 05 – கடற்படை 07)

முதற் பாதி நிறைவடைவதற்கு முன்னர் இரண்டு பெனால்டி வாய்ப்பின் மூலம் 6 புள்ளிகளை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணியானது முதற் பாதியை முன்னிலை பெற்ற நிலையில் பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 11 – கடற்படை 07)

முதற் பாதி : பொலிஸ் அணி 11 – கடற்படை அணி 07

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் அதிக புள்ளிகளை பெற்ற நிலையில் கடற்படை அணி பொலிஸ் அணியை விட அதிக புள்ளிகளைப் பெற்று சிறப்பான வெற்றியை பெற்றது.

இரண்டும் அணிகளும் அதிகமாக தவறுகளை மேற்கொண்டு எதிரணிக்கு பெனால்டி வாய்ப்புகளை கொடுத்ததை பார்க்கக்கூடியதாக இருந்தது.

அவ்வாறே எதிரணியின் ட்ரை கோட்டுக்கு அருகே கிடைத்த பெனால்டி வாய்ப்பை விரைவாக பெற்றுக்கொண்ட கடற்படை அணியின் சாணக சந்திமால் மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். எனினும் திலின வீரசிங்க உதையை தவறவிட்டார். (பொலிஸ் 11 – கடற்படை 12)

தொடர்ந்து கடற்படை மேற்கொண்ட தவறின் மூலம் பெனால்டி வாய்ப்பை பெற்றுக்கொண்ட பொலிஸ் அணியானது சன்சோனியின் உதையின் மூலம் 3  புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 14 – கடற்படை 12)

அடுத்த சில நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தது. முதலில் துலாஞ்சன விஜேசிங்க ட்ரை வைத்தார். பின்னர் உதார கயான் ட்ரை வைத்தார். (பொலிஸ் 21 – கடற்படை 19)

பொலிஸ் அணி வீரர் ரதீஷ செனவிரத்ன மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் திலின வீரசிங்க வெற்றிகரமாக உதைத்து கடற்படை அணியை போட்டியில் முன்னிலை அடைய செய்தார். (பொலிஸ் 21 – கடற்படை 22)

பொலிஸ் அணி 14 வீரர்களை மட்டும் கொண்டு விளையாடிய நிலையில் கடற்படை அணி 2 ட்ரை வைத்தது. ஸ்க்ரம் ஹாப் நிலை வீரர் சுரங்க புஷ்பகுமார பெனால்டி வாய்ப்பை விரைவாக எடுத்து ட்ரை கோட்டை நோக்கி பாய்ந்து ட்ரை வைத்தார். திலின வீரசிங்க உதையை தவறவிடவில்லை. (பொலிஸ் 21 – கடற்படை 29)

சுரங்க புஷ்பகுமார மற்றும் தனுஷ்க பெரேரா சிறப்பாக பந்தை தம்மிடையே பரிமாறிக்கொண்டதால் இறுதியில் தனுஷ்க பெரேரா அருமையான ஒரு ட்ரையை வைத்தார். திலின வீரசிங்க வெற்றிகரமாக கம்பங்களின் நடுவே உதைத்தார். (பொலிஸ் 21 – கடற்படை 36)

சாணக சந்திமால் பரிமாறிய பந்தை பெற்றுக்கொண்ட கடற்படை அணியின் திலின வீரசிங்க கடற்படை அணி சார்பாக இறுதி ட்ரை வைத்தார். உதையை திலின வீரசிங்க தவறவிட்டபொழுதும் போட்டியின் வெற்றியை கடற்படை அணி உறுதி செய்துகொண்டது. (பொலிஸ் 21 – கடற்படை 41)

இறுதியாக உதார  கயான் பொலிஸ் அணி சார்பாக ஆறுதல் ட்ரை ஒன்றை வைத்தார். ராஜித சன்சோனி உதையை வெற்றிகரமாக உதைத்த பொழுதும் போட்டியில் வெற்றிபெற புள்ளிகள் போதுமானதாக காணப்படவில்லை. (பொலிஸ் 28 – கடற்படை 41)

முழு நேரம் :  பொலிஸ் அணி 28 – கடற்படை அணி 41

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் தனுஷ்க பெரேரா (கடற்படை)

புள்ளிகள் பெற்றோர்

கடற்படை அணி

ட்ரை –  தினுஷ பெர்னாண்டோ, சாணக சந்திமால், துலாஞ்சன விஜேசிங்க, சுரங்க புஷ்பகுமார, தனுஷ்க பெரேரா, திலின வீரசிங்க

கொன்வெர்சன் – திலின வீரசிங்க 4

பெனால்டி – திலின வீரசிங்க

பொலிஸ் அணி

ட்ரை – ரதீஷ செனவிரத்ன, உதார கயான் 2

கொன்வெர்சன் – ராஜித சன்சோனி 2

பெனால்டி  – ராஜித சன்சோனி 2

WATCH MATCH REPLAY