பாகிஸ்தானின் தோல்வியை பொறுப்பேற்ற சதாப் கான்

Asia Cup 2022

625

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியமைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாக அந்த அணியின் உதவித் தலைவர் சதாப் கான் தெரிவித்துள்ளார்.

டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6ஆவது முறையாக இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நசீம் ஷாவின் முதல் ஓவரிலேயே குசல் மெண்டிஸ் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.

அதன்பின், பெதும் நிஸ்ஸக் 8 ஓட்டங்களுடனும், தனுஷ்க குணதிலக்க ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த தனன்ஜய டி சில்வாவும், அணித் தலைவர் தசுன் ஷானகவும் அடுத்தடுத்தது ஆட்டமிழக்க இலங்கை அணி 58 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஜோடி சேர்ந்த பானுக ராஜபக்ஷ மற்றும் வனிந்து ஹஸரங்க இருவரும் இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி அதிரடி காட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது.

இதனிடையே. இலங்கைக்காக துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்து அரைச் சதம் அடித்த பானுக ராஜபக்ஷவின் 2 முக்கிய பிடியெடுப்புகளை சதாப் கான் தவறவிட்டடிருந்தார். ஒருவேளை பானுக ராஜபக்ஷவின் முதலாவது பிடியெடுப்பை எடுத்திருந்தால் இலங்கை அணி 150 ஓட்டங்களைக் கடந்திருக்காது.

எனவே, பாகிஸ்தான் அணியின் முன்னணி களத்தடுப்பாளர்களில் ஒருவரான சதாப் கான், இவ்வாறு 2 பிடியெடுப்புகளை தவறவிட்டமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து தனது டுவிட்டரில் சதாப் கான் வெளியிட்ட பதிவில்,

”பிடியெடுப்புகளை எடுத்தால் வெற்றி பெற முடியும். ஆனால் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பிடியெடுப்புகளை தவறவிட்டமை மற்றும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது அணியின் தோல்விக்கு நான் தான் காரணம். நஷீம் ஷா, ஹரீஸ் ரவூப் ஆகிய இருவரினதும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

அதேபோல, மொஹமட் ரிஸ்வானும் சிறந்த முறையில் துடுப்பாடி நெருக்கடி கொடுத்திருந்தார். ஒட்டுமொத்த அணியும் தங்களால் இயன்றவரை முயற்சித்தது.  இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<