இந்தியாவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 2ஆவது வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள திலகரட்ன டில்ஷான் தலைமையிலான 20 பேர் கொண்ட இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக் குழாம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா வீதிப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றுகின்ற வீதிப் பாதுகாப்பு உலக T20 கிரிக்கெட் தொடரின் (Road Safety World Series 2022) 2ஆவது அத்தியாயம் இந்த மாதம் 10ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை இந்தியாவின் கான்பூர், ராஜ்பூர், இந்தூர் மற்றும் டேராடூன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் ராய்ப்பூரில் நொக் அவுட் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியா, அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், இங்கலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 8 லெஜெண்ட்ஸ் அணிகள் இம்முறை போட்டித் தொடரில் களமிறங்குகின்றன.
- லெஜண்ட்ஸ் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!
- தென்னாபிரிக்கா T20 லீக் தொடருக்கு புதிய பெயர்
- 2023 மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் அபுதாபியில்
இந்த நிலையில், திலக்கரட்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சனத் ஜயசூரிய இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் பயிற்றுநராகவும் செயற்படவுள்ளார்.
அதேபோல, இந்த ஆண்டு நடைபெறவுள்ள வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் தொடருக்கான இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்ற ஒருசில இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி சமிந்த வாஸ், ருமேஷ் சில்வா, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, இசுரு உதான, அசேல குணரட்ன, டில்ஷான் முனவீர, டில்ருவன் பெரேரா, மஹேல உடவத்த, சதுரங்க டி சில்வா, இஷான் ஜயரட்ன ஆகியோர் இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடிய உபுல் தரங்க, நுவன் குலசேகர, தம்மிக்க பிரசாத், கௌஷல்ய வீரரட்ன, சாமர கப்புகெதர, சின்தக ஜயசிங்க ஆகியோரும் இந்த ஆண்டு வீதிப் பாதுகாப்பு உலக T20 தொடரில் தொடருக்கான இலங்கைக் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.
மறுபுறத்தில் கடந்த ஆண்டு விளையாடிய அஜன்த மெண்டிஸ், மலிந்த வர்ணபுர, ரசல் ஆர்னல்ட், ரங்கன ஹேரத், திலின துஷார மற்றும் துலான்ஜன விஜேசிங்க ஆகிய வீரர்கள் இந்த ஆண்டு லெஜெண்ட்ஸ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் இடம்பெறவில்லை.
இதேவேளை, இந்தியாவின் 75வது சுதந்திர தின நிறைவை கொண்டாடும் விதமாக கண்காட்சி T20 கிரிக்கெட் போட்டியொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வேர்ல்ட் ஜயண்ட்ஸ் மற்றும் இந்திய மஹாராஜாஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சிப்போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான சனத் ஜயசூரிய மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<