சிறந்த டி-20 அணியொன்றை கட்டியெழுப்புவதே எனது இலக்கு – மாலிங்க

16

இலங்கை டி-20 அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் எவருமே எதிர்பார்க்காத வீரர்கள் மிக விரைவில் தமது திறமைகளை வெளிப்படுத்தி முன்னுக்கு வருவார்கள் என தெரிவித்த இலங்கை டி-20 அணியின் தலைவர் லசித் மாலிங்க, மிக விரைவில் இலங்கை அணியை சிறந்த டி-20 அணியொன்றாகக் கட்டியொழுப்புவதே தனது இலக்காகும் என தெரிவித்தார். 

இலங்கை – நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 தொடர் நாளை (01) கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மாலிங்க தலைமையிலான இளம் அணி வெற்றி வாகை சூடுமா?

சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று….

டி-20 போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 6ஆவது இடத்தில் நியூசிலாந்தும், 8ஆவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றது. 

எனவே, இத்தொடரை வெற்றிபெறுவதனால் டி-20 தரவரிசையில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படாவிட்டாலும், அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஒரு சிறந்த அணியொன்றை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் அமையவுள்ளது. 

இந்த நிலையில், நாளைய போட்டியில் முக்கிய 3 விக்கெட்டுக்களை விரைவாகக் கைப்பற்றினால் வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குவதாக இலங்கை அணித் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் நாளை ஆரம்பமாகவுள்ள டி-20 தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் இன்று (31) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்தத் டி-20 தொடருக்கான ஆயத்தம் குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாளை டி-20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரின் மூலம் நீண்டதொரு பயணத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி-20 தொடருக்கு முன் 19 டி-20 போட்டிகளில் நாங்கள் விளையாடவுள்ளோம். அப்போது அணிக்கு யார் தலைவராக இருந்தாலும் பலமிக்க அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டும். 

இதனால் டி-20 உலகக் கிண்ணத்தில் தன்னம்பிக்கையோடு களமிறங்கி சிறந்த முடிவொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுதான் எனது முதலாவது குறிக்கோளாகும். 

நான் எதிர்வரும் காலங்களில் அணியை வழிநடத்தினாலும், இல்லாவிட்டாலும், இந்தத் தொடரின் மூலம் இலங்கை டி-20 அணியை உருவாக்கிக் கொடுக்க எதிர்பார்த்துள்ளேன். அத்துடன், கடந்த காலங்களில் டி-20 போட்டிகளில் விளையாடிய ஒருசில வீரர்கள் அணியில் உள்ளனர். 

எனவே அவர்கள் எவ்வாறு இந்தத் தொடரில் பிரகாசிப்பார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கான துடுப்பாட்ட வரிசை தீர்மானிக்கப்படும். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத வீரர்கள் முன்னுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். 

எனினும், சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடும் போது அவர்களுடைய அனுபவமே, வயதோ கருத்திற் கொள்ளப்படமாட்டாது. 

அதேபோல, நியூசிலாந்து அணியுடனான டி-20 தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை கருத்திற்கொண்டு ஒருசில வீரர்களின் துடுப்பாட்ட வரிசை மாற்றியமைக்கப்படும். 

எனவே, அணியில் இடம்பெற்று 100 சதவீதம் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களைக் கொண்டுதான் டி-20 உலகக் கிண்ணத்துக்கான குழாமும் தீர்மானிக்கப்படும் என தெரிவித்தார்.  

இதேநேரம், அண்மைக்காலமாக இலங்கை அணி டி-20 போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்தவில்லை. எனவே இளம் வீரர்கள் கொண்ட அணியுடன் விளையாடுவது எவ்வாறான சவாலைக் கொடுக்கும் என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

உதாரணத்துக்கு 2014 டி-20 உலகக் கிண்ணத்துக்கு செல்லும் போது நாங்கள் டி-20 தரவரிசையில் 6ஆவது அல்லது 7ஆவது இடத்தில் இருந்தோம். அவ்வாறு சென்று நாங்கள் இலங்கைக்கு டி-20 உலகக் கிண்ணத்தை கொண்டு வந்தோம். ஆனால் தற்போது நாங்கள் தரவரிசையில் இருக்கின்ற இடம் முக்கியமல்ல. மாறாக அணியில் இடம்பெறுகின்ற ஒவ்வொரு வீரரும் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். 

அத்துடன், அவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்கான மனநிலையை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

ஹன்ரட் கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளராக மஹேல

இங்கிலாந்து கிரிக்கெட் சபை 2020ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அணிக்கு 100 பந்துகள்….

இதனிடையே, நாங்கள் இம்முறை உலகக் கிண்ணத்துக்கு இங்கிலாந்து செல்லும் போது ஒருநாள் தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருந்தோம். எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணியை நாங்கள் வீழ்த்தினோம்.

எனவே தரவரிசை என்பது எனக்கு ஒரு இலக்கமாக உள்ளது. தற்போதுள்ள இடத்தைப் பற்றி நான் சிந்திக்க மாட்டேன். போட்டியிடுகின்ற எதிரணியைத் தான் முதலில் பார்ப்பேன். 

ஆகவே எந்தவொரு அணியையும் வீழ்த்துகின்ற திறமை படைத்த வீரர்கள் இலங்கை அணியில் உள்ளனர். எனவே இந்தத் தொடரை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் நாங்கள் களமிறங்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், முதல் டி-20 போட்டிக்கான இறுதி பதினொருவர் தொடர்பில் கருத்து தெரிவித்த மாலிங்க, பொதுவாக ஒரு அணியில் ஏழு துடுப்பாட்ட வீரர்களும், நான்கு பந்துவீச்சாளர்களும் இடம்பெறுவார்கள். அதேநேரம், ஏழு துடுப்பாட்ட வீரர்களிலும் யாராவது பந்துவீச வேண்டும். எனவே அந்தத் திட்டத்துடன் தான் நாம் களமிறங்கவுள்ளோம். 

அதேபோல, வேகப் பந்துவீச்சாளர்களையா அல்லது சுழல் பந்துவீச்சாளர்களையா அதிகம் பயன்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. எனினும், நியூசிலாந்து அணி வீரர்கள் வேகப் பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்வார்கள். இன்றும், நாளையும் ஆடுகளம் திறந்து இருப்பதால் நிச்சயம் அதனை அவதானித்து தான் இறுதி பதினொருவர் அணி தீர்மானிக்கப்படும். 

அஷேனின் போராட்ட துடுப்பாட்டத்தால் போட்டியை சமப்படுத்திய இலங்கை வீரர்கள்

இலங்கை வளர்ந்து வரும் அணி மற்றும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிகளுக்கு….

இதேவேளை, இப்போட்டியில் லசித் மாலிங்க இன்னும் 3 விக்கெட்டுக்களை எடுத்தால் சர்வதேச டி-20 அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார். இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 

எனக்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது முக்கியமல்ல. எனினும், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியமானது. எனவே நாளைய போட்டியில் 3 விக்கெட்டுக்களை நான் எடுத்தால் வெற்றி பெற்றுவிட்டோம் என்பது அர்த்தம் கிடையாது என தெரிவித்தார். எனவே எனது 100 சதவீத பங்களிப்பினை வழங்கி அணியை வெற்றிபெறச் செய்வேன் என குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<