தென்னாபிரிக்கா T20 லீக் தொடருக்கு புதிய பெயர்

232

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்படவுள்ள T20 லீக் தொடருக்கு ‘SA20’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் அடுத்த ஆண்டு ஜனவரி – பெப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ள புதிய T20 லீக் தொடர் குறித்த முக்கிய அறிவிப்புகளை போட்டித் தெடரின் ஆணையாளரான கிரேம் ஸ்மித் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

இதன்படி, 2023 ஜனவரி முதல் பெப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரின் வீரர்கள் ஏலம் செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தென்னாபிரிக்கா T20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகளின் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள்.

சுபர் கிங்ஸ் அணியில் இணையும் தீக்ஷன! ; தலைவராகும் டு பிளெசிஸ்!

இதன்படி, சென்னை சுபர் கிங்ஸ் – ஜோஹன்னஸ்பர்க் அணியையும், மும்பை இந்தியன்ஸ் – கேப் டவுன் அணியையும், சன் ரைசர்ஸ் – போர்ட் எலிசபெத் அணியையும், லக்னோ – டர்பன் அணியையும், ராஜஸ்தான் றோயல்ஸ் – பார்ல் அணியையும், டெல்லி கெபிடல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஜிண்டால் சௌத் வெஸ்ட் ஸ்போர்ட்ஸ் – பிரிடோரியா அணியையும் ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளன.

இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். T20 லீக்கின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு அணியும் ஏலத்துக்கு முன்பு மூன்று வெளிநாட்டு வீரர்கள், ஒரு தென்னாபிரிக்க வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத ஒரு தென்னாபிரிக்க வீரர் என ஐந்து வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

அதேபோல, ஒவ்வொரு அணியும் தலா 7 வெளிநாட்டு வீரர்களையும், 10 தென்னாபிரிக்கா வீரர்களையும் வாங்கலாம். ஒரு போட்டியில் விளையாடும் 11 வீரர்களில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.

எனவே, அனைத்து அணிகளும் தற்போது இரண்டு முதல் ஐந்து மார்க்கீ வீரர்களை தங்கள் அணிகளில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதில் எம்.ஐ. கேப் டவுன், ஜோஹன்னஸ்பர்க் சுபர் கிங்ஸ், டர்பன் ஆகிய மூன்று அணிகளும் தலா 5 வீரர்களைத் தேர்வு செய்துள்ளன. பார்ல் றோயல்ஸ் அணி 4 வீரர்களையும் பிரிடோரியா கெபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய இரு அணிகளும் தலா 2 வீரர்களையும் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<