ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழக அணி தனது மிகப் பெரிய போட்டியாளரான பார்சிலோனாவை இரண்டாம் கட்டப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் மொத்தம் 5-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை பத்தாவது தடவையாகவும் சுவீகரித்துக்கொண்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்ட இறுதிப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றி பெற்றிருந்த நிலையிலேயே, மெட்ரிட் நகரில் புதன்கிழமை (16) நடந்த இரண்டாவது கட்ட போட்டியிலும் ரியல் மெட்ரிட் ஆதிக்கம் செலுத்தியது.

ஸ்பெய்ன் ஜாம்பவான்களின் மிகப் பெரிய மோதலில் ரியல் மெட்ரிட் முன்னிலையில்

உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் UEFA ஸ்பனிஷ் சுப்பர் கிண்ணப் போட்டியின்…

ஸ்பெயினின் முன்னணி போட்டித் தொடர்களான லா லிகா மற்றும் கோபா டெல் ரேவில் என்பவற்றில் சம்பியன் கிண்ணத்தை வெல்லும் அணிகளுக்கு இடையிலேயே ஸ்பானிய சுப்பர் கிண்ணப் பலப்பரீட்சை இடம்பெறுகிறது.

இதன்படி கடந்த பருவகாலத்தின் லா லிகா சம்பியனான ரியல் மெட்ரிட் மற்றும் கோபா டெல் ரே சம்பியனான பார்சிலோனா அணிகளுக்கு இடையிலேயே 31 ஆவது ஸ்பானிய சுப்பர் கிண்ணப் போட்டி இடம்பெற்றது. இதில் ‘எல் கிளசிகோ’ என்று அழைக்கப்படும் ரியல் மெட்ரிட் – பார்சிலோனாவுக்கு இடையிலான பலப்பரீட்சையாக இந்த போட்டி இடம்பெற்றது 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது முதல் முறையாகும்.

முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என்ற கோல்களால் முன்னிலை பெற்றிருக்கும்போது தனது சொந்த மைதானமான பெர்னபியுவில் இரண்டாவது கட்டத்தில் களமிறங்கியது. எனினும், ரியல் மெட்ரிட்டின் முன்னணி வீரர் ரொனால்டோவுக்கு ஐந்து போட்டிகளில் தடை விதிக்கப்பட்டதால் அவருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

எவ்வாறாயினும் இந்த பருவகாலத்தின் ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய சம்பியனான மெட்ரிட் அணிக்கு ரொனால்டோ இல்லாதது பெரும் குறையாகத் தெரியவில்லை. போட்டி ஆரம்பித்தது தொடக்கம் அந்த அணி ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் முன்கள வீரர் கரெத் பாலே கூட ஆசனத்தில் அமரவைக்கப்பட்டிருந்தார்.

போட்டி ஆரம்பமாகி நான்கு நிமிடங்களிலேயே 21 வயதுடைய அசென்சியோ, பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். கோல் கம்பத்திற்கு தொலைதூரத்தில் இருந்து இடது கோணர் திசையில் இருந்து தனது இடது காலால் பந்தை பறக்கவிட்ட அசென்சியோ கோல்காப்பாளரையும் திகைப்பூட்டி முதல் கோலைப் பெற்றார்.

இதன்போது, தடுமாற்றம் கண்ட பார்சிலோனா அணிக்கு கோலொன்றை புகுத்த மெஸ்ஸி கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் போட்டி ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழித்தே மெஸ்ஸியின் காலுக்கு பந்து கிடைத்தது. இதன்போது மெஸ்ஸி இரு தடவைகள் கோல் போட முயற்சித்தபோதும் ரியல் மெட்ரிட் பின்கள வீரர்கள் முன் அது முடியாமல் போனது.

மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக விளையாடும் உசேன் போல்ட்

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து..

இந்நிலையில், ரியல் மெட்ரிட் அணியின் பென்செமா 39 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட, அந்த அணி அசைக்க முடியாது முன்னிலை பெற்றது. மார்சலோ பரிமாற்றிய பந்தை கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து லாவகமாக பெற்ற பென்செமா, அந்தப் பந்தை இரு முறை அருகருகே உதைத்துவிட்டு கோலுக்குள் புகுத்தினார். இதனால் ரியல் மெட்ரிட் முதல் பாதிய முடியும்போது இரு கோல்களால் முன்னிலை பெற்றது.

முதல் பாதி: ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் 2-0 பார்சிலோனா கால்பந்துக் கழகம்

இரண்டாவது பாதியில் பாரிசிலோனாவுக்கு கோல் பெற வாய்ப்பொன்று கிடைத்தபோதும் மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இரு நிமிடங்கள் கழித்து ரியல் மெட்ரிட் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பந்தை பார்சிலோனா கோல் எல்லை வரை கொண்டுசென்றபோதும், அதனை கோலாக்கும் முயற்சி இறுதி நொடியில் தவறியது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் கோல் வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்தபோதும் அதனை கோலாக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. விளிம்பில் இருந்து 71ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த பந்தை லுவிஸ் சுவாரஸ் தலையால் முட்டி கோலாக்க முயன்றாலும் அந்தப் பந்து கம்பங்களுக்கு மேலே பறந்து சென்றது.

கடைசியில் இரண்டாவது பாதி ஆட்டம் எந்த கோலுமின்றி முடிவடைய ரியல் மெட்ரிட் அணியின் வெற்றி உறுதியானது. குறிப்பாக பார்சிலோனா அணி தனது முன்னணி வீரர் நெய்மரை இழந்திருக்கும் நிலையிலேயே இந்த போட்டியில் மோதி மிக மோசமான தோல்வியை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், சினேடின் சிடேனின் பயிற்சியின் கீழ் ரியல் மெட்ரிட் அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருகின்றது. சிடேன் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அவரது பயிற்சியின் கீழ் லா லிகா கிண்ணத்தை வென்ற ரியல் மெட்ரிட் அணி கடந்த வாரத்தில் UEFA சுப்பர் கிண்ணத்தையும் சுவீகரித்தமை நினைவுகூறத்தக்கது.

ரியல் மெட்ரிட் அணி ஸ்பானிய சுப்பர் லீக் கிண்ணத்தை வெல்வது இது பத்தாவது தடவையாகும்.

முழு நேரம்: ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் 2-0 பார்சிலோனா கால்பந்துக் கழகம்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழகம் – அசென்சியோ 4’, பென்செமா 39’

மஞ்சள் அட்டை

பார்சிலோனா கால்பந்துக் கழகம் – லுவிஸ் சுவெரஸ் 89’, ஜுவியர் மஸ்சரானோ 90+3’