IPL ஆடுவது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் வனிந்து ஹஸரங்க

1274
Wanindu Hasaranga

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கும் வனிந்து ஹஸரங்க, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் ஆடுவது குறித்த தனது நிலைப்பாட்டினை லசித் மாலிங்கவின் YouTube சேனல் வாயிலாக நடைபெற்ற உரையாடல் ஒன்றின் மூலம் வெளிடியிட்டிருக்கின்றார்.

கவுண்டி அணிக்காக ஆடவுள்ள திமுத் கருணாரட்ன

அதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனது சுழல் பந்துவீச்சினை விருத்தி செய்வதற்காக செய்யும் விடயங்கள் பற்றியும் உரையாடிய வனிந்து ஹஸரங்க, அதற்காக உலகின் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருவரின் பந்துவீச்சுப் பாணியினைப் பின்பற்றுவதாக குறிப்பிட்டிருந்தார். 

”நான் (மணிக்கட்டு சுழல்வீரர்களாக இருக்கும்) ரஷீட் கான் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரினையும் பின்பற்றி வந்திருந்தேன். ஏனெனில், அவர்கள் இருவரும் எனது பந்துவீச்சுப் பாணியினை ஒத்தவிதத்தில் இருப்பதோடு, அவர்கள் நான் வீசுகின்ற அதே வேகத்திலும் பந்துவீசுகின்றனர். அவர்கள் தங்களது தாய் நாட்டிற்காக ஆடும் போதும், அவர்கள் உள்ளூர் T20 தொடர்களில் ஆடும் போதும், அவர்களை நான் பார்த்து கற்றுக்கொள்கின்றேன்.” 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகின்ற சந்தர்ப்பங்களில் எதிரணிகள் தனது பந்துவீச்சு நுணுக்கங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக இருப்பது பற்றியும் குறிப்பிட்ட வனிந்து ஹஸரங்க, இவ்வாறான நிலைகளில் தான் அவதானமாக இருப்பதற்கு செய்துவருகின்ற விடயங்கள் பற்றியும் தெரிவித்திருந்தார். 

”(கடைசியாக) ஆடிய நான்கு தொடர்களிலும் எதிரணிகள் எனது பந்துவீச்சுக்கு பாதுகாப்பான துடுப்பாட்ட முறைகளை உபயோகம் செய்ததனையே என்னால் அவதானிக்க முடியுமாக இருந்தது. எனது பந்துவீச்சுக்கு அவர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இதனால், எனக்கு அதிக விக்கெட்டுக்களை எடுக்க முடியாமல் இருந்தது.

எனவே, இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் ஓட்டமற்ற பந்துகளை வீசி எனது அணிக்கு பங்களிப்பு வழங்கினேன். இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் வழமையாக வீசும் பந்துகளை வீசியிருந்ததோடு, சில தருணங்களில் மாத்திரமே விக்கெட்டுக்களை எதிர்பார்க்கும் பந்துகளை போட்டிருந்தேன். என்னுடைய இந்த செயற்பாடு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் எனக்கு உபயோகம் தரும் விடயமாக அமைந்திருந்தது.”

CPL தொடரிலிருந்து விலகும் வனிந்து ஹசரங்க

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்றுவிப்பாளராக இருக்கும் பியால் விஜேயதுங்கவிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் குறித்தும் கருத்து வெளியிட்ட வனிந்து ஹஸரங்க அவரினால் அதிக பயன்களைப் பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். 

”பியால் (விஜேதுங்க) ஐயா ஒரு சுழல்பந்து பயிற்றுவிப்பாளராக எங்களுக்கு கற்றுத்தரும் விடயங்கள் மிகவும் பெறுமதியாக இருக்கின்றன. முன்னர், எங்களுக்கு இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கு ஒரு பயிற்றுவிப்பாளர் இல்லாமல் இருந்தார் எனக் கருதுகின்றேன். எனவே, இந்த சந்தர்ப்பத்தில் சுழல் பந்துவீச்சாளர்களாக ஆலோசனை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டோம். இப்போது நான் அவருடன் இணைந்து பந்தின் வேகத்தினை மாற்றுவது தொடர்பிலும், விக்கெட்களுக்கான புதிய பந்துவீச்சினை கண்டுபிடிப்பதிலும் கவனம் செலுத்துகின்றோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இறுதியில் IPL போட்டிகளில் ஆடுவது குறித்தும் கருத்து வெளியிட்டிருந்த வனிந்து ஹஸரங்க, தனக்கு அதில் ஆடுவதற்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

”எனக்கு கிரிக்கெட்டில் இரண்டு கனவுகள் இருக்கின்றன. அதில் ஒன்று IPL போட்டிகளில் ஆடுவதாக இருப்பதோடு, மற்றையது இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியொன்றுக்கு ஆடுவதாக இருக்கின்றது. இந்திய அணிக்கு எதிரான தொடரின் பின்னர் இரண்டு IPL அணிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு அழைத்திருந்தன. எனினும், நான் எந்த அணிக்கு ஆடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கவில்லை அதோடு இது பற்றிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

நான் போதிய (T20) லீக் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாத காரணத்தினால் IPL அணி ஒன்றில் இணைவது எனக்கு இன்னும் அனுபவத்தினை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றேன். முன்னதாக நான் T10 தொடரில் மாத்திரமே ஆடியிருந்தேன். IPL தொடரில் ஆடும் போது உலகின் ஏனைய லீக் கிரிக்கெட் தொடர்களில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு அனுபவத்தினை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.

அதோடு, T20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே IPL போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. எனவே, உலகக் கிண்ணத்தில் ஆடும் போது அங்கே இருக்கும் நிலைமைகளை அறிந்து கொண்டு ஆடுவது எனக்கு பிரயோசனமாக இருக்கும்.”  என்றார். 

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…