ரோயல் செலஞ்சர்ஸ் அணியுடன் இணையும் தென்னாபிரிக்க வேக நட்சத்திரம்

278
RCB rope in Wayne Parnell, Vyshak Vijaykumar

தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான வேய்ன் பர்னல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

>> இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் பங்களாதேஷ் அணியில்

ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் வெளிநாட்டுப் பந்துவீச்சாளராக காணப்பட்ட ரீஸ் டொப்லி மற்றும் ரஜாட் பட்டிதார் ஆகியோர் உபாதைக்குள்ளாகியிருந்தனர். இந்த வீரர்களை 2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் எஞ்சிய போட்டிகளில் பிரதியீடு செய்யும் நோக்கிலேயே வேய்ன் பர்னலின் ஒப்பந்தம் இடம்பெற்றிருக்கின்றது. அத்துடன் வேய்ன் பர்னலுடன் கர்நாடகப் பந்துவீச்சாளர் வைஷாக் விஜயகுமாரினையும் ரோயல் செலஞ்சர்ஸ் அணி பிரதியீட்டு வீரராக இணைத்திருக்கின்றது.

இந்த வீரர்களில் வேய்ன் பர்னல் இந்திய நாணயப்படி 75 இலட்ச ரூபாய்களுக்கும் (இலங்கை நாணயப்படி சுமார் 2.9 கோடி), வைஷாக் விஜயகுமார் 20 இலட்ச ரூபாய்களுக்கும் (இலங்கை நாணயப்படி 78 இலட்ச ரூபாய்) ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடைசியாக 2014ஆம் ஆண்டிலேயே ஐ.பி.எல். போட்டி ஒன்றில் விளையாடியிருந்த வேய்ன் பர்னல் தற்போது தொடர்ச்சியாக தென்னாபிரிக்க அணிக்காக பிரகாசித்து வந்த நிலையிலையே ஐ.பி.எல். வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இதுவரை ஐ.பி.எல். போட்டிகளில் ஆடாத 26 வயது நிரம்பிய வைஷாக் விஜயகுமார் அண்மையில் நிறைவுக்கு இந்திய உள்ளூர் T20 தொடரான சையத் முஸ்தாக் அலி கிண்ணத் தொடரிலும், அதற்கு முன்னர்

நடைபெற்ற ரஞ்சி கிண்ணத் தொடரிலும் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் ரெய்லி மெர்டித்

இதேவேளை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது இறுதியாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வியினைத் தழுவிய பின்னர், தமது அடுத்த மோதலில் எதிர்வரும் திங்கட்கிழமை (10) லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியினை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<