தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய அணித் தலைவர் நியமனம்

2101
AB de Villiers
© Getty

தென் ஆபிரிக்க டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து ஏபி. டி வில்லியர்ஸ் பதவி விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக டூ ப்ளெஸிஸ் புதிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வரை தென் ஆபிரிக்க அணியை, அணித் தலைவராக வழிநடத்திய ஹசிம் அம்லா தலைமை பதவியிலிருந்து விலகியதன் பின்னர், தலைமைப் பொறுப்பெடுத்த ஏபி. டி வில்லியர்ஸ் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். எனினும், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனது. அத்துடன் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.

ஏபி. டி வில்லியர்ஸ் இது குறித்து கருத்து கூறுகையில் ”தனிப்பட்ட நலன்களை விட அணியின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுகின்றேன். தென் ஆபிரிக்க அணிக்கு என்னை தலைமை தாங்குமாறு வேண்டியதை மிகவும் கெளரவமாக நினைக்கிறேன். மேலும், கடந்த இரண்டு டெஸ்ட் போட்டித் தொடர்களுக்கு என்னால் காயம் காரணமாக பங்குபற்ற முடியாமல் போனது. அத்துடன் எதிர்வரும் இலங்கை அணியுடனான போட்டிகளில் பங்குபற்றுவதும் சந்தேகமாகவே இருக்கிறது. அத்துடன், டூ ப்ளெஸிஸ் தலைமயிலான தென் ஆபிரிக்க அணி, கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வென்று சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தது. அதனால் தொடர்ந்தும் டூ ப்ளெஸிஸை நிரந்தர டெஸ்ட் அணித் தலைவராக உறுதி செய்யப்படுவது அணிக்கு அதிக நலன்களை பெற்றுக்கொடுக்கும்” என்று கடந்த திங்கள் (டிசம்பர் 12) தெரிவித்திருந்தார்.

”கடந்த இருபது வருடங்களாக டூ பிளெஸிஸை எனக்கு தெரியும். நாம் இருவரும் ஆப்ரிகன்ஸ் ஹோர் சியன்ஸ்கூலில் ஒரே அணியில் விளையாடியுள்ளோம். தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியினை தொடர்ந்து தலைமை தாங்குமாறு பணிக்கப்பட்டாலும் என்னுடைய முழு ஆதரவும் அவருக்கு கிடைக்கும்” என்று மேலும் தெரிவித்தார்.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தலைமை நிர்வாகியான ஹாரூன் லோர்கேட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ”நாங்கள் ஏபி. டி வில்லியர்ஸ்ஸின் முடிவுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொண்டதோடு டூ ப்ளெஸிஸை  தென் ஆபிரிக்க அணித் தலைவராக அறிவித்தோம். அத்துடன், ஏபி. டி வில்லியர்ஸ் அணியின் நலன் குறித்தே உண்மையாக அக்கறை காட்டினார். அதனாலேயே தனது அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதை உறுதி செய்தார்” என்று ஹாரூன் லோர்கேட் தெரிவித்தார். அத்துடன் ஏபி. டி வில்லியர்ஸ்சுக்கு பதிலாக டூ ப்ளெஸிஸை தலைவராக நியமிக்கபட்டதையிட்டு ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

கடந்த ஜூலை மாதம் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றிய ஏபி. டி வில்லியர்ஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கையுடனான டெஸ்ட்  போட்டிகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்த்திருந்தார். எனினும், இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது அறுவை சிகிச்சை நிபணர் ஆலோசனைப்படி மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன்படி மேலும் மூன்று முதல் நான்கு வாரங்கள் குறித்த உடல் தகுதியை பெறுவதற்கு காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தென் ஆபிரிக்க அணி முகாமையாளர் வைத்தியர் முஹம்மத் மூசஜி தெரிவித்தார்.

”ஏபி. டி வில்லியர்ஸ் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். எனினும் குறித்த முழங்கை முழுமையாக சுகமடைவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவைப்படும். அதன்படி டெஸ்ட் போட்டிகளுக்கு பங்குபற்ற முடியாவிட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறவுள்ள இலங்கையுடனான ஒருநாள் போட்டிகளில் பங்குபற்ற எதிர்பார்த்துள்ளார்” என்று முஹம்மத் மூசஜி தெரிவித்தார்.