LPL இல் இருந்து விலகிய பாப் டூ ப்ளெசிஸ் PSL தொடரில்

442
Faf du Plessis

கராச்சியில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஓப் சுற்றில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாப் டூ ப்ளெசிஸ் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாடவுள்ளார். 

கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகிய பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடர் கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.   

>> PSL தொடரில் விளையாட பங்களாதேஷ் வீரர்களுக்கு அனுமதி

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பிளே ஓப் சுற்று உட்பட அரையிறுதி, இறுதிப் போட்டிகள் இம்மாதம் 14ஆம், 15ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கராச்சியில் நடைபெறவுள்ளன. 

ஆறு அணிகள் பங்குபற்றிய பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் கடந்த மார்ச் மாதம்வரை நடைபெற்று முடிந்த லீக் போட்டிகளின் முடிவில் அணிகள் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முல்தான் சுல்தான், கராச்சி கிங்ஸ், லாஹுர் குவாலண்டர்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய அணிகள் இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன

இதன்படி, பிளே ஓப் சுற்றில் தென்னாபிரிக்காவிலிருந்து 7 வீரர்கள், இங்கிலாந்திலிருந்து 6 வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 4 வீரர்கள், பங்களாதேஷிலிருந்து 2 வீரர்கள், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்திலிருந்து தலா ஒரு வீரர் விளையாடவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

இதனிடையே, பி.எஸ்.எல் தொடரின் பெஷாவர் ஸால்மி அணிக்காக விளையாடிவந்த கிரென் பொல்லார்ட், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அந்த நேரத்தில் விளையாடவுள்ளதால், அவருக்கு பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

>> Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

இதையடுத்து அவருக்குப் பதிலாக தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான பாப் டூ ப்ளெசிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதல்முறையாக பாப் டூ ப்ளெசிஸ் பி.எஸ்.எல் தொடரில் இணைந்துள்ளார்

இதுதொடர்பில் பாப் டூ ப்ளெசிஸ் கருத்து தெரிவிக்கையில், ”இறுதிச் சுற்றில் பெஷாவர் ஸால்மி அணிக்கு விளையாடவுள்ளதையிட்டு பெரும் உற்சாகம் அடைகின்றேன். அத்துடன், ஐ.சி.சி உலக பதினொருவர் அணியுடன் 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த பசுமையான நினைவுகள் இன்னும் என் மனதில் இருக்கின்றது.  

கொவிட் – 19க்கு மத்தியில், தற்போதைய மாறுபாடான சூழ்நிலையில் இந்த அனுபவமும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் என நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

>> சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே

முன்னதாக, இம்மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20i தொடரில் பாப் டூ ப்ளெசிஸ் விளையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  

எனினும், இங்கிலாந்து அணியுடன் இம்மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாட இருப்பதால் அவர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

எதுஎவ்வாறாயினும், இம்முறை .பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 13 லீக் போட்டிகளில் விளையாடிய பாப் டூ ப்ளெசிஸ், நான்கு அரைச்சதங்களுடன் 449 ஓட்டங்களைக் குவித்திருந்தார்

அத்துடன், இதுவரை தென்னாபிரிக்கா அணிக்காக 47 T20i போட்டிகள் உட்பட 255 சர்வதேச போட்டிகளில் பாப் டூ ப்ளெசிஸ் விளையாடியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<