சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்திய ஜிம்பாப்வே

171

சுற்றுலா ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணி சுபர் ஓவர் முறையில் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கின்றது.

சனத் ஜயசூரியவுக்கு விதிக்கப்பட்ட ஐசிசியின் தடை நீங்கியது!

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் அணியுடன் தலா மூன்று போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள் தொடரிலும், T20 தொடரிலும் ஆடுகின்றது. 

இந்த சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக நடைபெறும் ஒருநாள் தொடரில், இரண்டு போட்டிகள் நிறைவடைந்து அவை இரண்டிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி செவ்வாய்க்கிழமை (03) ராவல்பின்டி நகரில் தொடங்கியது.

பின்னர், போட்டியில் முதலில் துடுப்பாடிய ஜிம்பாப்வே அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை எடுத்தனர். ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் சதம் தாண்டிய சோன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்கள் பெற்று அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார். மறுமுனையில், பாகிஸ்தான் அணிக்காக மொஹமட் ஹஸ்னைன் வெறும் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனை அடுத்து, போட்டியின் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை எடுத்ததால் ஆட்டம் சமநிலை அடைந்தது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் தலைவர் பாபர் அசாம் சதம் விளாசி 125 ஓட்டங்களை பெற்றார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் ப்ளெசிங் முசாரபனி 5 விக்கெட்டுக்களைச் சாய்த்தார்.

தொடர்ந்து ஆட்டம் சமநிலை அடைந்ததால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க சுப்பர் ஓவர் வழங்கப்பட்டிருந்தது. 

Video – LPL இல் பயிற்சியாளராகும் இலங்கை வீரர்கள் | Sports Roundup – Epi 138

சுப்பர் ஓவரில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியினர் அதில் 2 விக்கெட்டுக்களையும் இழந்து 2 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தனர். இதன் பின்னர், சுப்பர் ஓவரின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 3 ஓட்டங்களை அடைய களமிறங்கிய ஜிம்பாப்வே அதனை 5 ஓட்டங்களுடன் பெற்று, பாகிஸ்தான் அணியினை சுப்பர் ஓவர் முறையில் வீழ்த்தியது.

இப்போட்டியில் கிடைத்த வெற்றி ஜிம்பாப்வே அணிக்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆறுதல் வெற்றியாக அமைய, பாகிஸ்தான் அணி தொடரினை 2-1 எனக் கைப்பற்றிக் கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 278/6 (50) சோன் வில்லியம்ஸ் 118*, ப்ரன்டன் டெய்லர் 56, சிக்கந்தர் ரஷா 46*, மொஹமட் ஹஸ்னைன் 26/5

பாகிஸ்தான் – 278/9 (50) பாபர் அசாம் 125, வஹாப் ரியாஸ் 52, ப்ளெசிங் முசாரபனி 49/5

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (ஜிம்பாப்வே அணி சுப்பர் ஓவரில் வெற்றி)

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<