ஷெஹான் ஜயசூரியவின் சதத்தின் உதவியுடன் சிலாபம் மேரியன்ஸ் வலுவான நிலையில்

182

ஷெஹான் ஜயசூரிய மற்றும் ஓஷத பெர்னாண்டோவின் சதத்தின் மூலம் இராணுவப்படைக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் கழகம் ஓட்ட மழை பொழிந்து வருகிறது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த சிலாபம் மேரியன்ஸ், 2 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த ஷெஹான் ஜயசூரிய மற்றும் ஓஷத பெர்னாண்டோ 183 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துகொண்டனர். அபாரமாக துடுப்பாடிய ஜயசூரிய 108 பந்துகளில் 118 ஓட்டங்களை குவித்தார். முறுமுனையில் எதிரணியை திக்குமுக்காடச் செய்த ஒஷத பெர்னாண்டோ இன்றைய நாள் முழுவதும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்து 181 ஓட்டங்களுடன் இரட்டை சதத்தை நெருங்கியுள்ளார்.

ஆட்டநேர முடிவின்போது சிலாபம் மேரியன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 418 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 418/4 (90) – ஷெஹான் ஜயசூரிய 118, ஓஷத பெர்னாண்டோ 181*, சச்சித்ர சேரசிங்ஹ 65, ரசித் உபமால் 41, ஜனித் சில்வா 2/59 

SSC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

கொழும்பு SSC மைதானத்தில் A குழுவுக்காக ஆரம்பமான போட்டியில் பலம் கொண்ட SSC அணிக்கு எதிராக கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்சில் 314 ஓட்டங்களை பெற்றது.

2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை

2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை…

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு மத்தியவரிசையில் வந்த அணித்தலைவர் அஷான் பிரியஞ்சன் (84), கவீன் பண்டார (53) மற்றும் மாதவ வர்ணபுர (79*) கைகொடுத்தனர்.

முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் SSC அணி தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 314 (80.5) – அஷான் பிரியஞ்சன் 84, மாதவ வர்ணபுர 79*, கவீன் பண்டார 53, லசித் அபேரத்ன 43, அக்தாப் காதர் 3/45, கசுன் மதுஷங்க 2/33, சச்சித்ர சேனநாயக்க 2/88

SSC (முதல் இன்னிங்ஸ்) – 28/0 (7)

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்

இடது கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு சமரகோனின் அதிரடி பந்துவீச்சால் சோனகர் விளையாட்டுக் கழகத்தை 163 ஓட்டங்களுக்கு சுருட்டிய ப்ளூம்பீல்ட் கழகம் முதல் நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சோனகர் விளையாட்டு கழகம் சார்பில் ஆரம்ப வரிசையில் வந்த வீரர்கள் பெரிதாக பிரகாசிக்கவில்லை. மத்திய வரிசை வீரர் ஷானுக்க துலாஜ் பெற்ற 39 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டமாகும். பந்துவீச்சில் மிரட்டிய சமரகோன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ப்ளூம்பீல்ட் கழகம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்   

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 163 (43.2) ஷானுக்க துலாஜ் 39, தரிந்து ரத்னாயக்க 36, பிரிமோஷ் பெரேரா 20, இம்ரான் கான் 2/13, லஹிரு சமரகோன் 4/56, ரமேஷ் மெண்டிஸ் 2/73 

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 132/4 (43.3) – நிசால் பிரான்சிகோ 61, சச்சின் ஜயவர்தன 38*, தரிந்து ரத்னாயக்க 2/55

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் BRC

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதானவின் சதத்தின் உதவியோடு BRC அணிக்கு எதிராக தமிழ் யூனியன் கழகம் முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது.

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தமிழ் யூனியனின் கழக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிதார கிம்ஹான் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் மறுமுனையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட பரணவிதான நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் அவர் முதல்தர கிரிக்கெட்டில் 36 ஆவது சதத்தைப் பெற்றார். 246 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க…

இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது தமிழ் யூனியன் தனது முதல் இன்னிங்சுக்காக 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 288/6 (90) – தரங்க பரணவிதான 114*, தினெத் திமோத்ய 57, ஷகீல கருனநாயக்க 37, மனோஜ் சரத்சந்திர 33, விகும் சஞ்சய 2/55

 இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

கடைசி வரிசையில் வந்த மதுக்க லியனபதிரனகே அதிரடியாக ஆடி சதம் விளாசியதன் மூலம் பதுரெலிய அணிக்கு எதிராக இலங்கை துறைமுக அதிகார சபை அணி வலுவான நிலையில் உள்ளது.

மக்கொன சர்ரே மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணி 111 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் 7 ஆவது விக்கெட்டுக்கு பிரஷான் விக்ரமசிங்க மற்றும் லியனபதிரனகே 158 ஓட்ட இணைப்பாட்டத்தைப் பெற்று அணியை வலுப்பெறச் செய்தனர். இதில் விக்கெட் காப்பாளர் விக்ரமசிங்க 88 ஓட்டங்களைப் பெற்றதோடு மறுமுனையில் லியனபதிரனகே 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களைப் பெற்றார்.

எனினும் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்காக அலங்கார அசங்க 6 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை துறைமுக அதிகார சபை அணி முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகளை இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 328/8 (85) – மதுக லியனபதிரனகே 101*, பிரஷான் விக்ரமசிங்க 88, அதீல் மாலிக் 25, கிஹான் ரூபசிங்க 48, அலங்கார அசங்க 6/71, நிம்னத சுபசிங்க 2/55